வடக்கு மாகாணத்தில் முதலீடுகளை மேற்கொள்ள ஜப்பானிய முதலீட்டாளர்கள் ஆர்வம்
வடக்கு மாகாணத்திலும் முதலீடுகளை மேற்கொள்வதற்கு சில ஜப்பானிய முதலீட்டாளர்கள் ஆர்வம் கொண்டுள்ளதாக இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் அகியோ ஐசோமாதா வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, ஜப்பானிய முதலீட்டாளர்கள் இலங்கையின் தற்போதைய நிலைமைகளையும் வடக்கு மாகாணத்தின் சூழலையும் அவதானித்து வருவதாகவும் ஜப்பானியத் தூதுவர் குறிப்பிட்டார்.
வடக்கு மாகாணத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர், வடக்கு மாகாண ஆளுநரை இன்று (23.09.2026) காலை ஆளுநர் செயலகத்தில் சந்தித்து, பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினார்.
முதலீடு
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் பதவியேற்ற பின்னர் முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான ஆர்வம் அதிகரித்துள்ளதாகவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை, வடக்கு மாகாணத்தின் முதலீட்டு வாய்ப்புகளை மேலும் மேம்படுத்துவதற்கும், நவீன தொழில்நுட்ப அறிவைப் பகிர்ந்து கொள்வதற்கும் ஜப்பானிய அரசாங்கத்தின் ஒத்துழைப்பு அவசியம் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

ஜப்பானிய முதலீட்டாளர்கள் இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் முதலீட்டு சூழலை அவதானித்து வருவதாகக் குறிப்பிட்ட தூதுவர், வடக்கு மாகாணத்திலும் முதலீடுகளை மேற்கொள்வதற்கான ஆர்வம் அவர்களிடம் காணப்படுவதாக தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கையின் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் வடக்கு மாகாணத்தில் ஜப்பானிய மொழியைக் கற்றவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும், வடக்கு மாகாணத்தில் ஜப்பானிய மொழிக் கற்கைகளை ஆரம்பிப்பது தொடர்பிலும் தாம் கவனம் செலுத்தி வருவதாகவும் ஜப்பானியத் தூதுவர் குறிப்பிட்டார்.





