பிரசவகால விடுமுறை எடுக்கும் ஜப்பானிய பெண் மேயர்: நாடு முழுவதும் வெடித்த விவாதம்
ஜப்பானின் யவடா (Yawata) நகர மேயரான 35 வயது ஷோகோ கவாடா (Shoko Kawata) பிரசவகால விடுமுறை எடுக்கப்போவதாக அறிவித்துள்ளமை அந்த நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
ஜப்பான் வரலாற்றிலேயே பிரசவகால விடுமுறை எடுக்கும் முதல் மேயர் இவராவார்.
பிரசவகால விடுமுறை
ஜப்பானில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் பிரசவகால விடுமுறை எடுப்பதற்கான சட்டபூர்வமான கட்டமைப்பு எதுவும் தற்சமயம் இல்லை.
இதனால், கவாடா அதிகாரப்பூர்வமாக விடுமுறை எடுக்காமல், தனக்கு வழங்கப்பட்ட உரிமையின் அடிப்படையில் தனது துணை மேயரிடம் தற்காலிகமாகப் பொறுப்புகளை ஒப்படைத்துள்ளார்.

தனது பிரசவத் திகதிக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பும், பிரசவத்துக்குப் பின்பு இரண்டு மாதங்களும் என மொத்தம் நான்கு மாதங்கள் அவர் விடுமுறையில் இருக்கத் திட்டமிட்டுள்ளார்.
இவரது இந்த முடிவுக்கு அவரது அலுவலகத்தில் உள்ள சக ஊழியர்கள் முழு ஆதரவு தெரிவித்துள்ள போதிலும், பொதுமக்களிடையே இணையதளங்களில் இதுகுறித்த ஆதரவும் எதிர்ப்பும் கலந்த விவாதங்கள் எழுந்துள்ளன.
ஒரு தரப்பினர், கவாடாவின் இந்த முடிவு மற்ற பெண்களும் அரசியலுக்கு வருவதற்கான ஒரு சிறந்த முன்மாதிரியாக இருக்கும் என்று பாராட்டியுள்ளனர்.
விமர்சனங்கள்
ஆனால், விமர்சகர்களோ மக்கள் பணியில் இருக்கும் ஒருவர் இவ்வாறு விடுமுறை எடுப்பது பொறுப்பற்றது என்றும், அவர் பதவி விலக வேண்டும் என்றும், விடுமுறை கால ஊதியத்தைக் குறைக்க வேண்டும் என்றும் தங்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றனர்.
இந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்துள்ள கவாடா, பிரசவகால விடுமுறை எடுக்கும் பெண் அரசியல்வாதிகளை நாம் விமர்சித்தால், அது 20 முதல் 40 வயதுக்குட்பட்ட தகுதியுள்ள அனைத்துப் பெண்களையும் மக்கள் பணியில் இருந்து ஒதுக்கி வைப்பதற்குச் சமம் என்று கூறியுள்ளார்.

உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக இருந்தபோதிலும், பாலின சமத்துவக் குறியீட்டில் ஜப்பான் தொடர்ந்து பின்தங்கியே உள்ளது.
இத்தகைய சூழலில், வேலை அல்லது குடும்பம் என இரண்டில் ஒன்றை மட்டுமே பெண்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற நிலை மாறி, இரண்டையும் இணைந்து செய்யும் சூழல் சமூகத்தில் உருவாக வேண்டும் என மேயர் கவாடா தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார்.