ஜப்பானின் திடீர் கைது நடவடிக்கை: நடுக்கடலில் நடந்த பரபரப்பு!
ஜப்பானின் பிரத்தியேகப் பொருளாதாரக் கடல் பகுதியில் (EEZ) ஆய்வுக்கு ஒத்துழைக்காமல் தப்பியோட முயன்றதாகக் கூறி, சீன மீன்பிடி கப்பல் ஒன்றை ஜப்பானிய மீன்பிடித்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இந்தச் சம்பவம், தென்மேற்கு ஜப்பானின் நாகசாகி மாகாணத்தில் உள்ள மெஷிமா தீவுக்கு அருகே இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது நடவடிக்கை முன்னெடுப்பு
இதன்போது, 47 வயதான சீன மாலுமி ஜெங் நியான்லி (Zheng Nianli) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுமார் 11 பணியாளர்களுடன் இருந்த இந்தக் கப்பல், ஜப்பானிய அதிகாரிகளின் உத்தரவை மீறி தப்பியோடியதால் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டிற்குப் பிறகு சீனக் கப்பல் ஒன்று ஜப்பானால் கைப்பற்றப்படுவது இதுவே முதல் முறை என்பதால், ஆசியாவின் இரு பெரும் பொருளாதார நாடுகளுக்கு இடையே மீண்டும் மோதல் போக்கு உருவாகியுள்ளது.
பொருளாதார மோதலாக மாறுமா?
இந்த நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜப்பானிய தலைமை அமைச்சரவைச் செயலாளர் மினோரு கிஹாரா, சட்டவிரோத கடற்றொழிலைத் தடுக்க ஜப்பான் தொடர்ந்து உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தைவான் விவகாரத்தில் ஜப்பானிய பிரதமர் சானே தகாய்ச்சி தெரிவித்த கருத்துகளால் சீனா கடும் அதிருப்தியில் உள்ள நிலையில், இந்தச் சம்பவம் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் அமைந்துள்ளது.
இதற்குப் பதிலடியாக ஜப்பானிய கடல் உணவுகளுக்குத் தடை மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாடுகளைச் சீனா ஏற்கனவே விதித்துள்ள நிலையில், தற்போது சீனக் கப்பல் பிடிபட்டிருப்பது தூதரக ரீதியான மோதலை மேலும் தீவிரப்படுத்தும் என அஞ்சப்படுகிறது.