இலங்கையுடனான அபிவிருத்தி திட்டங்களுக்கு ஜப்பான் பச்சைக்கொடி
இலங்கையில் இடைநிறுத்தப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை மீள ஆரம்பிப்பதற்கான நிதியை விடுவிப்பதாக ஜப்பானிய அரசாங்கம் இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதைத் தொடர்ந்து, திட்டங்களை மீள ஆரம்பிப்பதற்கான நிதியை விடுவிப்பதை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு இன்று (24) நிதியமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த ஜப்பானிய தூதுக்குழுவினர், நாட்டின் கடன் மறுசீரமைப்பு செயல்முறையை வெற்றிகரமாக நிறைவு செய்ததை பாராட்டியதுடன், ஜப்பானிய உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவித் திட்டங்களை (ODA) மீள ஆரம்பிப்பதற்கு இது வழிவகுத்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இடைநிறுத்தப்பட்ட பல முயற்சி
கடந்த காலப்பகுதியில் இடைநிறுத்தப்பட்ட பல முயற்சிகளை உள்ளடக்கிய இந்த திட்டங்கள் தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்படுவதற்கு தயாராக உள்ளதாகவும், இது ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தியின் புதுப்பிக்கப்பட்ட கட்டத்தை சமிக்ஞை செய்வதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) அபிவிருத்தித் திட்டம், கொழும்பு துறைமுக கிழக்கு முனைய அபிவிருத்தித் திட்டம், மத்திய அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணம் மற்றும் டிஜிட்டல் ஒலிபரப்புத் திட்டம் உட்பட தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள பல திட்டங்களை உடனடியாக மீள ஆரம்பிக்க முடியும் என ஜப்பானிய பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், முந்தைய அரசாங்கத்தால் நிறுத்தப்பட்ட இலகு ரயில் போக்குவரத்தை (LRT) மீண்டும் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகளை பிரதிநிதிகள் குழு எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான குறிப்பிடத்தக்க சாத்தியக்கூறுகளை உணர்ந்து, இந்தத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கான இடங்களை தீவிரமாக மதிப்பீடு செய்து வருவதாகவும் இதன்போது கூறப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |