ஜப்பானில் கொண்டாடப்படும் செர்ரி பூ விழா இரத்து
ஜப்பானின் புஜியோஷிடா (Fujiyoshida) நகரத்தில் ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும் செர்ரி பூ விழா (Cherry Blossom Festival), இந்த ஆண்டு (2026) இரத்து செய்யப்பட்டுள்ளது.
ஜப்பானின் புகழ்பெற்ற மவுண்ட் புஜி (Mount Fuji) மலையின் பின்னணியில் செர்ரி பூக்கள் பூத்துக் குலுங்கும் அழகைக் காண உலகம் முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் புஜியோஷிடா நகருக்கு வருவது வழக்கம்.
ஆனால், இந்த ஆண்டு அந்த விழா அதிகாரப்பூர்வமாக இரத்து செய்யப்படுவதாக மேயர் ஷிகெரு ஹோரியுச்சி அறிவித்துள்ளார்.
நாளொன்றுக்கு சுமார் 10,000க்கும் மேற்பட்ட பயணிகள் சிறிய நகரமான புஜியோஷிடாவிற்குள் நுழைவதால் உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கடுமையான சிக்கல்கள்
அத்துடன், சுற்றுலாப் பயணிகள் அத்துமீறி உள்ளூர் மக்களின் வீடுகளுக்குள் நுழைவது, தனியார் தோட்டங்களில் அசுத்தம் செய்வது (மலம் கழிப்பது உள்ளிட்டவை), மற்றும் குப்பைகளை வீசிச் செல்வது போன்ற முறைப்பாடுகள் எழுந்துள்ளன.

"இன்ஸ்டாகிராம்" புகைப்படங்களுக்காக பயணிகள் வீதியின் நடுவே நிற்பதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பாடசாலை செல்லும் சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் கூட்ட நெரிசலால் பாதிக்கப்படுவதாக உள்ளூர் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
"எங்கள் குடிமக்களின் கண்ணியத்தையும் அமைதியான வாழ்க்கையையும் பாதுகாக்கவே 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த விழாவை முடிவுக்குக் கொண்டு வரத் தீர்மானித்துள்ளோம்" என்று மேயர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், விழா இரத்து செய்யப்பட்டாலும் பயணிகள் வருவதைத் தடுக்க முடியாது என்பதால், கூட்டத்தைக் கட்டுப்படுத்த கூடுதல் பாதுகாப்புப் படையினரை நியமிக்கவும், தற்காலிக கழிப்பறைகளை அமைக்கவும் நகர நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
ஜப்பான் மட்டுமல்லாமல், இத்தாலியின் ரோம் நகரில் உள்ள ட்ரெவி நீரூற்றை (Trevi Fountain) காண வருபவர்களிடம் தற்போது 2 யூரோ கட்டணம் வசூலிக்கத் தொடங்கியுள்ளனர். அதேபோல் வெனிஸ் நகரிலும் நுழைவுக் கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
லண்டனில் தன்னார்வ யூத ஆம்புலன்ஸ்கள் தீ வைப்பு: இது கோழைத்தனம்! பிரதமர் ஸ்டார்மர் கண்டனம் News Lankasri