37 ஆண்டுகளாகப் புறக்கணிக்கப்படும் கந்தளாய் ஜனசக்தி வீதி: மக்கள் விசனம்
கந்தளாய் - பேராறு பகுதியில் அமைந்துள்ள ஜனசக்தி வீதி கடந்த 37 ஆண்டுகளுக்கும் மேலாக புனரமைக்கப்படாமல் அதிகாரிகளாலும், அரசியல்வாதிகளாலும் புறக்கணிக்கப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதன்படி, சுமார் 37 வருடங்களாக இந்த வீதி எந்தவிதமான மேம்பாட்டுப் பணிகளுமின்றி சிதைவுற்று காணப்படுகின்றது என்றும் கூறப்படுகிறது.
சிதைவுற்ற பாதை
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்கள் மார்க்கன் சந்திக்கு பின்னால் அமைந்துள்ள இந்த வீதியை, சுமார் 30 முதல் 40 குடும்பங்கள் தமது அன்றாடத் தேவைகளுக்காகப் பயன்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக, பாடசாலை மாணவர்கள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் இந்த வீதியைப் பயன்படுத்துவதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். மழைக்காலங்களில் இந்த வீதி சேறும் சகதியுமாக மாறி போக்குவரத்துக்கு அற்ற நிலைக்குச் செல்வதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மக்களின் கோரிக்கை
இது தொடர்பாக கடந்த காலங்களில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களுக்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் பலமுறை எழுத்து மூலம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இருப்பினும், இதுவரை எவ்விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர். "தேர்தல் காலங்களில் மட்டும் வாக்குறுதிகளை வழங்கும் அரசியல்வாதிகள், வெற்றி பெற்ற பின்னர் எம்மைத் திரும்பிப் பார்ப்பதில்லை" என அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய அரசாங்கமாவது மக்களின் அவல நிலையை உணர்ந்து, உடனடியாக இந்த ஜனசக்தி வீதியை புனரமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.