நீதிமன்ற தடுப்புக் கூண்டில் போதை மருந்து வீசியவருக்கு சிறைத்தண்டனை
நீதிமன்ற தடுப்புக் கூண்டிற்குள் இருந்த கைதியொருவருக்கு போதை மருந்து வீசியெறிந்தவருக்கு ஆறுமாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நுகேகொட, கங்கொடவில மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று (22) இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
கங்கொடவில, நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில், சிறைச்சாலைகளில் இருந்து வழக்குகளுக்காக அழைத்து வரப்பட்ட கைதிகள் நீதிமன்ற தடுப்புக் கூண்டுக்குள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
கடித உறை
இதன் போது நீதிமன்றத்தில் உட்புறமாக அமர்ந்திருந்த நபரொருவர் தடுப்புக் கூண்டுக்குள் போதைப்பொருளை உறையொன்றுக்குள் சுற்றி வீசியெறிந்துள்ளார்.
சந்தேகநபரின் செயலை நீதிபதியின் ஆசனத்தில் இருந்த மேலதிக நீதவான் மற்றும் நீதிமன்ற பாதுகாவல் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட இன்னும் பலரும் நேரடியாக அவதானித்துள்ளனர்.
அதனையடுத்து நீதிமன்ற பொலிஸ் உத்தியோகத்தர், உடனடியாக குறித்த கடித உறையை கைப்பற்றிக் கொண்டார். அதற்குள் ஐஸ் போதைப் பொருள் இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு
சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது அவர் தனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள வழக்கு ஒன்றின் விசாரணைக்கு முன்னிலையாக கங்கொடவில நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவித்திருந்தார்.
சந்தேகநபர் மீது ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்தமை மற்றும் நீதிமன்ற அவமதிப்பு ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் தனித்தனியாக வழக்கு தொடரப்பட்டு அந்த குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டது.
குற்றவாளியாக காணப்பட்ட விதானகே டொன் எரந்த பெரேரா என்பவருக்கு கங்கொடவில மேலதிக நீதவான் சஞ்சய் லக்மால் விஜேசிங்க ,நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்காக மூன்று மாத சிறைத்தண்டனையும், ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்தமைக்காக மூன்று மாத கடூழிய சிறைத்தண்டனையும் விதித்து உத்தரவிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |