யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் விசேட அமர்வு
யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் விசேட அமர்வு இன்று(08) சபையின் தவிசாளர் திராகராசா பிரகாஸ் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இதன்போது சபையின் தீர்மானங்களுக்கு மாறாக, தவிசாளருக்கும் தெரிவிக்காமல் செயலாளர் தன்னிச்சையாக செயற்படுவதாக உறுப்பினர்கள் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
இதனால் சபையின் ஆரம்பத்தில் குழப்பமான நிலை ஏற்பட்டதையடுத்து, தவிசாளரால் சபை அமர்வு 20 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டு பின்னர் சபை அமர்வுகள் ஆரம்பமானது.
பதவிகள் பகிர்ந்தளிப்பு
இதன்போது சபையின் செயலாளர் சபை தீர்மானங்களுக்கு எதிராக செயற்படுவதாக உறுப்பினர்கள் மீண்டும் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
அத்தோடு சபையில் கடந்த இரண்டு வருடங்களாக இடம்பெற்ற ஊழல் தொடர்பில் ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என செயலாளரிடம் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.
மேலும் தான் சொல்வதை கேட்காவிட்டால் நீங்கள் வெளியேறுங்கள் என தவிசாளர் செயலாளரிடம் தெரிவித்தார். அத்தோடு சபை தீர்மானத்தின் படி நேர்த்தியான ஒழுங்குகளில் மீள சாரதிகள் பணிக்கு அமர்த்தப்படுவதாக முடிவு எடுக்கப்பட்டு தவிசாளரால் அறிவிக்கப்பட்டது.
இறுதியாக பிரதேச சபையின் உப குழுக்கள் அமைக்கப்பட்டு அதற்கான தலைவர்களும் தெரிவு செய்யப்பட்டனர். இதன்போது இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கிடையில் தலைவர் பதவிகள் பகிர்ந்தளிக்கப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |