கரி நாள் பேரணிக்கு ஆதரவு தருமாறு யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு
சுதந்திர தினத்துக்கு எதிராக வடக்கு கிழக்கில் நடைபெறவுள்ள கரி நாள் பேரணிக்கு அனைத்து தரப்புக்களும் பங்கேற்று வலுச்சேர்க்க வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு விடுத்தனர்.
யாழ் ஊடக அமையத்தில் நேற்று(1) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினர், முகாமைத்துவ மற்றும் வணிக பீட மாணவர் ஒன்றியத்தினர் இதற்கு அழைப்பு விடுத்தனர்.
மேலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் பிரதிநிதிகளும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு போராட்டத்திற்கு ஆதரவளிக்க அழைப்பு விடுத்தனர்.
கரிநாள் பேரணி
இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4 ஆம் திகதியை கரி நாளாக பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கில் போராட்டத்தை நடத்த தீர்மானித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் சில தினங்களாக அதற்கு பொதுமக்களை அணி திரட்டி வலுச்சேர்க்கும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இது குறித்து யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் அ.அபிஷேக் தெரிவிக்கையில் எமது உரிமைகளை பெற்றுக் கொள்ளக்கூடிய ஒரே வழி கல்வியாக தன் காணப்படுகிறது.
எங்களது மக்களின் நலனுக்காகவே நாங்கள் பல்கலைக்கழகம் சென்றோம். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் நாங்கள் என்ன காரணத்திற்காக பல்கலைக்கழகம் சென்றோமோ அந்த காரணம் தற்போது பின்னோக்கி செல்லப்படுகிறது.
கோரிக்கை
ஒரு காலகட்டத்தில் தமக்கான நிலம் வேண்டும் என்று போராடியவர்கள் தான் தமிழ் மக்கள். இன்றைய அரசாங்கம் வடக்கு - கிழக்கு மக்களை இணைத்து ஒன்றாக பயணிப்போம் என்று கூறினாலும் தமிழர் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை செய்து கொண்டே இருக்கின்றனர்.

உங்களது ஆக்கிரமிப்புகளை எந்த அளவிற்கு விரைவாக நிறுத்துகின்றீர்களோ அந்த அளவிற்கு தான் இந்த நாட்டினை ஒன்றாக மாற்ற முடியும்.
அரசாங்கம் சொல்வது ஒன்று செய்வதொன்று. இவ்வாறான சூழ்நிலையில் மீண்டும் இளைஞர்கள் அரசாங்கத்திற்கு எதிரான நிலையில் செல்லலாம். எனவே அரசாங்கம் அனைத்து மக்களையும் சம கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.