யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீடத்தை மாவட்ட மாணவர்கள் புறக்கணிப்பதாக தகவல்
யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில் கல்வி பயில்வதற்கு யாழ். மாவட்ட மாணவர்கள் எவரும் விரும்பாத காரணத்தால் இம்முறை யாழ். மாவட்டத்தில் இருந்து எவரும் தெரிவுசெய்யப்படவில்லையென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளதாக யாழ். பல்கலைக்கழக விளையாட்டு துறை விரிவுரையாளர் மாணிக்கவாசகர் இளம்பிரயான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது முகப்புத்தக பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் மேலும், 2022ஆம் ஆண்டு உயர்தர பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக தெரிவு விபரம் அண்மையில் வெளியிடப்பட்டது.
விருப்ப தேர்வு
அதனடிப்படையில் யாழ். மாவட்டத்தில் பொறியியல் கற்பதற்கு தகுதியுள்ள அனைவரும் தென்பகுதி பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்ததன் காரணமாக எவரும் யாழ். பல்கழைக்கழகத்தினை விருப்ப தேர்வாக கொள்ளாத காரணத்தால் எவரும் இம்முறை அனுமதிக்கப்படவில்லை.
மிகுந்த சிரமத்தின் மத்தியில் 1990களில் அனுமதி பெறப்பட்டு 2010களில் ஆரம்பிக்கப்பட்ட பொறியியல் பீடம் எம் மாணவர்கள் பயன் பெற வேண்டுமென்ற நோக்கிலேயே ஆரம்பிக்கப்பட்து குறிப்பிடத்தக்கதாகும்.
ஆனால் அப்பீடத்தில் கல்வி கற்க எம் மாணவர்கள் விரும்பாதது வேதனையான விடயமாகும். அது மட்டுமல்ல எமது பெற்றோரும் தங்களின் பிள்ளைகளை எமது மண்ணிலேயே கல்விகற்பிக்க விரும்பாதது ஆச்சரியமான விடயமாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.