யாழ்.புதிய பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பயணிகள் போக்குவரத்து சேவை ஆரம்பம் (Video)
யாழ்.நகரப் பகுதியில் காணப்படும் போக்குவரத்து நெருக்கடிகளைக் கருத்திற் கொண்டு அனைத்து உள்ளுர் மற்றும் வெளியூருக்கான தனியார் பயணிகள் பேருந்து சேவைகள் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்நடைமுறை இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறைப்பாடுகள்
பேருந்து நிலையத்திற்கு இன்று காலை நேரில் சென்று பார்வையிட்ட யாழ். மாநகர முதல்வர் வி.மணிவணணன், யாழ் மாநகர ஆணையாளர் இ த.ஜெயசீலன், தனியார் பேருந்து சங்கங்களின் பிரதிநிகள், பொலிஸார் இது தொடர்பில் கலந்துரையாடியதுடன் தற்போதுள்ள சில குறைபாடுகளை நிவர்த்தி செய்வது தொடர்பில் ஆராய்ந்துள்ளனர்.
யாழ். நகர் பகுதியில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெருக்கடிகளை நிவர்த்தி செய்யும் முகமாக புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தங்களது சேவைகளை ஆரம்பித்த அனைத்து தனியார் சங்கங்களின் தலைவர்கள் பிரதிநிதிகள் மற்றும் பேருந்து உரிமையாளர்களுக்கும் யாழ்ப்பாணப் போக்குவரத்து பொலிஸாருக்கும் யாழ். மாநகர முதல்வர் தனது நன்றிகளைத் தெரிவித்து கொண்டார்.
தற்போதைய போக்குவரத்து சேவைகளில் ஏற்படுகின்ற இடர்பாடுகளை இனங்கண்டு அடுத்த வாரம் அது தொடர்பில் ஆராய்ந்து இத் திட்டத்தனை மேம்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
தனியார் பேருந்துகள் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நெடுந்தூர பேருந்து நிலையத்தில் இருந்து சேவையில் ஈடுபடுவதால் யாழ். நகரப் பகுதி குறிப்பாக வைத்தியசாலையின் பின் வீதி மணிக்கூட்டுக்கோபுர வீதி வாகனங்களில் குறைவாக இருந்ததுடன் நெரிசலின்றியும் பயணிக்க கூடியதாக காணப்பட்டதை அவதானிக்க முடிந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
யாழ். நகரப்பகுதியில் இருந்து சேவை வழங்கும் அரச மற்றும் தனியார் பேருந்துகள் யாழ். போதனா வைத்தியசாலையின் முன்புற வீதியை பயன்படுத்துவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
யாழ். மாநகர சபையில் அமைந்துள்ள முதல்வர் அலுவலகத்தில் நேற்று(07.11.2022) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
யாழ். போதனா வைத்தியசாலையின் முன்புற வீதியில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகின்ற நிலையில் அதனை கட்டுப்படுத்தும் முகமாக சகல பேருந்துகளும் மாற்று வழியில் பயணிக்குமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.
மாற்று வழிகளை பயன்படுத்தல்
பருத்தித்துறை வீதியால் யாழ். நகரத்துக்கு வருகின்ற மற்றும் புறப்படும் பேருந்துகளும் வைத்தியசாலை வீதியினால் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மாற்று ஒழுங்குகளில் பயணத்தை மேற்கொள்ள முடியும்.
மேலும் அண்மையில் யாழ். நகரப்பகுதில் திறந்து வைக்கப்பட்ட தொலைதூர பயணிகள் பேருந்து தரிப்படத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை தொடக்கம் நெடுந்தூர பயணத்தில் ஈடுபடும் தனியார் பேருந்துகளும் குறித்த இடத்தில் இருந்து சேவை வழங்கும்.
அதே நேரத்தில் உள்ளூர் சேவைகளில் ஈடுபடும் தனியார் பேருந்துகள் குறித்த தரிப்பிடத்தில் பயணிகளை இறக்க வேண்டும்.
இவ் நடைமுறைகள் யாவும் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்து
உரிமையாளர் சங்கம் ஆகியவற்றிற்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை மீறி
செயல்படும் சாரதிகளுக்கு எதிராகப் பொலிஸார் சட்ட நடவடிக்கைகளை
மேற்கொள்வார்கள் என தெரிவித்துள்ளார்.




