யாழில் பிரபல பாடசாலையொன்றில் ஆசிரியரால் மாணவன் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி
யாழில் பிரபல பாடசாலையொன்றின் 9 ம் தரத்தில் கல்வி கற்று வரும் 14 வயது மாணவன் ஒருவர் ஆசிரியை மற்றும் அதிபர் தாக்கியதில் அடிகாயங்களுடன் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பாடசாலை விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்று வரும் மாணவன் வகுப்பறை தலைவராக இருந்து வருவதாகவும், கடந்த 20 ம் திகதி வகுப்பறைக்கு பாடத்திற்கான ஆசிரியர் வரும் போது அவருக்கு எழுந்து நின்று காலை வணக்கம் தெரிவிக்கவில்லை என அந்த ஆசிரியர் பிரம்பினால் அடித்துள்ளார்.
இதன்போது பிரம்பு மாணவனின் கண்ணில் குத்தி காயமேற்பட்டுள்ளதுடன்,மாணவன் கண்ணில் ஏற்பட்ட வலி காரணமாக அழமுற்பட்ட போது வகுப்பைக்கு இடையூறு செய்யாது இருக்குமாறு மாணவனை ஆசிரியர் அச்சுறுத்தி கதிரையில் அமர்த்தியுள்ளார்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவன் தாயாரிடம் சம்பவம் குறித்து தெரிவித்த நிலையில் தாயார் பாடசாலைக்கு சென்று வினவிய நிலையில் அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்னர்.
இதன் பின்னர் சம்பவ தினமான நேற்று வெள்ளிக்கிழமை (23) பாடசாலையின் அதிபரும் ,விடுதியின் பொறுப்பாளரும் குறித்த மாணவனை அழைத்து ஆசிரியர் அடித்தது தொடர்பாக தாயாருக்கு தெரிவித்தமை தொடர்பில் வினவி மீண்டும் மாணவனை தாக்கியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவன் அடிகாயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்.பொலிஸ் நிலையத்தில் தாயார் வழங்கிய முறைப்பாட்டிற்கமைய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
