கோட்டாபயவுக்கு அகதி அந்தஸ்து கொடுக்கக் கூடிய ஒரே இடம் யாழ்ப்பாணம்: ஈஸ்வரபாதம் சரவணபவன்(Video)
”இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில் பாதிக்கப்பட்ட எம் மக்களுக்கு அகதிகள் அந்தஸ்து ஏதோ ஒரு வகையில் கிடைத்தது. ஆனால் கோட்டாபய ராஜபக்சவுக்கு அதுவும் இல்லை. இருப்பினும் பாதுகாப்பான, அகதி அந்தஸ்து அவருக்கு கொடுக்க கூடிய ஒரே இடம் யாழ்ப்பாணம் தான்” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.
யுத்த காலங்களில் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
யுத்த காலங்களில் தமிழ் மக்கள் பொருளாதார பிரச்சினை காரணமாகவே சென்றதாக ஒரு கருத்து காணப்பட்டது. ஆனால் எம்மக்கள் இந்த நாட்டில் வாழ விருப்பமின்றி அகதிகளாகவே சென்றனர்.
எத்தனையோ மக்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ள நிலையில் பலர் தமது குடும்ப உறுப்பினர்களை இழந்துள்ளனர். இதற்கெல்லாம் காரணமாக இருந்த கோட்டாபய ராஜபக்சவுக்கு கலியுகத்தில் கடவுள் தண்டனை கொடுத்துள்ளார்.
கோட்டாபய முகங்கொடுக்கும் பிரச்சினைகள்
எதை அவர் கண்ணை மூடிக்கொண்டு செய்தாரோ அதை இன்று அவர் அனுபவிக்கின்றார்.
தற்போது அவர் எல்லா நாடுகளுக்கும் சென்று வருகின்றார். எந்த நாடும் கோட்டாபயவை ஏற்க தயார் இல்லை.
சிங்கப்பூரில் இருந்து தற்போது தாய்லாந்துக்கு சென்றுள்ளார். அதுவும் எத்தனை நாட்கள் என்று தெரியவில்லை.
வெள்ளை கொடி ஏற்றி வந்தவர்களை சுட்டார். அதையும் நாங்கள் சகித்துக்கொண்டோம். ஏனெனில் எங்களிடம் வேறு வல்லமைகள் இல்லை. வல்லமைகள் இருந்திருந்தால் நாங்கள் வேறு பதிலினை கொடுத்திருப்போம் என தெரிவித்துள்ளார்.



