யாழ். மாநகர மேயர் தெரிவு ஒத்திவைப்பு: உள்ளூராட்சி ஆணையாளருக்கு எதிராக உறுப்பினர்கள் ஆட்சேபனை (video)
யாழ். மாநகர சபைக்கான இடைக்கால முதல்வர் தெரிவில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் நியாயமற்ற விதத்தில் நடந்து கொண்டுள்ளார் என்று குற்றஞ்சாட்டியுள்ள யாழ். மாநகர சபை உறுப்பினர்கள் 20 பேர், உள்ளூராட்சி ஆணையாளர் தன் தவறை நிவர்த்தி செய்யத் தவறினால் சட்ட நடவடிக்கைக்குச் செல்லவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
யாழ். மாநகர சபைக்கான இடைக்கால முதல்வர் தெரிவுக்கான கூட்டம் இன்று, 19 ஆம் திகதி காலை 10 மணிக்கு இடம்பெற்ற போது கூட்டத்துக்கான கோரம் இல்லாத காரணத்தினால் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த ஒத்திவைப்பு முறையற்றது என ஆட்சேபித்து இன்றைய கூட்டத்தில் பங்குபற்றிய 20 உறுப்பினர்கள் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்குக் கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளனர்.
கடிதத்தின் பிரதிகள் வடக்கு மாகாண ஆளுநருக்கும், யாழ். மாநகர சபையின் செயலாளருக்கும் அனுப்பப்பட்டுள்ளன.
அந்தக் கடிதத்தின் முழு விபரமும் வருமாறு,
“2012 ஆம் ஆண்டு 22 ஆம் இலக்க உள்ளூர் அதிசார சபைகள் தேர்தல்கள் (திருத்தச்) சட்டத்தின் 66(எ) பிரிவின் கீழ், 09-01-2023 திகதியிடப்பட்ட கடிதத்தின் பிரகாரம் தங்களால் கூட்டப்பட்ட யாழ். மாநகர சபை முதல்வர் தெரிவுக் கூட்டம் முறையற்ற விதத்தில் முடிவுறுத்தப்பட்டமைக்கான எமது ஆட்சேபணையைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
கூட்டம் ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில் 24 பேர் கலந்துகொண்டிருந்தனர். “கூட்டத்தில் 24 உறுப்பினர்கள் கலந்துகொண்டிருப்பதனால் - தேவையான நிறைவெண் இருப்பதனால் கூட்டம் ஆரம்பிக்கப்படுகிறது' எனத் தெரிவித்திருத்தீர்கள், அத்துடன் முதல்வர் தெரிவுக்கான முன்மொழிவைக் கோரினீர்கள். முதல்வராக எமது கட்சியின் உறுப்பினர் இ. ஆனோல்ட் அவர்களின் பெயர் முன்மொழியப்பட்ட பின், வேறேதும் முன்மொழிவுகள் இல்லாத நிலையில் முதல்வராக இம்மானுவல் ஆனோல்ட் அவர்கள் தெரிவாகும் ஏதுநிலை காணப்பட்டது.
இந்த நேரத்தில் முன்மொழிவை ஆட்சேபித்து தாம் வெளியேறுவதாக, சபையின் நான்கு உறுப்பினர்கள் வெளியேறினர். அந்த நேரத்தில் சட்ட ஏற்பாடுகளுக்குப் புறம்பாக தாங்கள் கூடத்தை ஒத்திவைப்பதாக அறிவித்தீர்கள்.
இது நியாமற்ற ஒரு அறிவிப்பு என உடனடியாகவே சபையில் எம்மால் ஆட்சேபனை பதிவு செய்யப்பட்டது. எனினும், எமது கோரிக்கையைக் கணக்கெடுக்காமல் தாங்கள் கூட்டத்தை இடைநிறுத்திவிட்டு, சபை மண்டபத்திலிருந்து வெளியேறினீர்கள்.
கூட்டம் ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில் தேவையான கோரம் இருந்த போதிலும், தெரிவுக்காக வேறு முன்மொழிவு இல்லாத கரணத்தினாலும், நான்கு உறப்பினர்களின் வெளியேற்றம் காரணமாக கோரமில்லை என்று எந்தவொரு உறுப்பினரும் ஆட்சேபனையும் தெரிவிக்காத காரணத்தினால் முன்மொழியப்பட்டபடி உறுப்பினர் இம்மானுவல் ஆனஸ்ட் அவர்களை முதல்வராக ஏகமனதாக அறிவிக்கப்பட்டிருப்பதே பொருத்தமானதென நாங்கள் கருதுகிறோம்.
எனவே இது தொடர்பாகத் தாங்கள் இழைத்த தவறை நிவர்த்தி செய்யத் தவறுவீர்களாயின் நாம் சட்ட நடவடிக்கையை நாடுவதற்கு நிர்ப்பந்திக்கப்படுவோம் என்பதைத் தங்களுக்கு அறியத் தருகிறோம்.“ என்றுள்ளது.
செய்தி: தீபன்
இரண்டாம் இணைப்பு
யாழ்ப்பாணம் மாநகரசபை மேயர் தெரிவுக்குச் சபையில் கோரம் இல்லாதமையால் சபை அமர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
யாழ். மாநகர மேயரைத் தெரிவு செய்வதற்கான சபை அமர்வு இன்று வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் தலைமையில் நடைபெற்றது.
அதன்போது 45 உறுப்பினர்களைக் கொண்ட யாழ். மாநகர சபையில் சபையைக் கூட்டுவதற்கான கோரமின்மையால் மாநகர மேயர் தெரிவு ஒத்திவைக்கப்பட்டது.
மாநகர மேயர் தெரிவையொட்டி மாநகர சபை வளாகத்தில் பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டனர்.
இதேவேளை, யாழ்ப்பாணம் மாநகர சபையின் சபா மண்டபத்தினுள் இன்று நுழைந்த மாநகர சபை உறுப்பினர்கள், ஊழியர்கள் மற்றும் செய்தி சேகரிப்பதற்காகச் சென்ற ஊடகவியலாளர்கள் அனைவரும் கோவிட் நோய்த் தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
யாழ்ப்பாண மாநகர சபை மேயர் தெரிவு இன்று இடம்பெறவுள்ள நிலையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் களமிறக்கப்படும் முன்னாள் மேயர் இ.ஆர்னோல்ட் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன எனத் தெரிவிக்கப்படுகின்றது.
யாழ். மாநகர மேயராக இருந்த ஆர்னோல்ட் சமர்ப்பித்த வரவு - செலவுத் திட்டம் இரு தடவைகள் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து புதிய மேயரைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது.
இதில் சட்டத்தரணி வி.மணிவண்ணனிடம் ஒரு வாக்கால் ஆர்னோல்ட் தோல்வியடைந்திருந்தார். புதிய மேயராகத் தெரிவு செய்யப்பட்ட வி.மணிவண்ணன் கடந்த ஆண்டு சமர்ப்பித்த வரவு - செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இரண்டாவது தடவையும் வரவு - செலவுத் திட்டத்தைச் சமர்ப்பிக்காமல் பதவி துறந்திருந்தார். இந்தநிலையில் மீண்டும் மேயர் தெரிவு இடம்பெற்றால் அதனைச் சவாலுக்கு உட்படுத்துவேன் என்று அவர் தெரிவித்திருந்தாலும் இன்று மேயர் தெரிவு இடம்பெறவுள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சி கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகக் களம் கண்டு 16 பேர் வெற்றி பெற்றிருந்தனர். உள்ளூராட்சி சபைத் தேர்தலையொட்டி தற்போது கூட்டமைப்பிலிருந்து இலங்கைத் தமிழரசுக் கட்சி வெளியேறியிருந்தாலும், புளொட் மற்றும் ரெலோ என்பன இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் களமிறக்கப்படும் ஆர்னோல்ட்டை ஆதரிக்கவுள்ளன எனத் தெரியவருகின்றது.
"மேயர் பதவி தேசிய கட்சிக்குச் செல்லக் கூடாது. மணிவண்ணன் கடந்த காலங்களில் தன்னிச்சையாகச் செயற்பட்டிருந்தார். எனவே, அவர் மீளவும் மேயராகத் தெரிவு செய்யப்படக்கூடாது" என்ற காரணங்களின் அடிப்படையில் ஆர்னோல்ட்டை ஆதரிப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக ரெலோவைச் சேர்ந்த பிரதி மேயர் து.ஈசன் தெரிவித்தார்.
இதேவேளை, ஆர்னோல்ட்டை எதிர்த்து வி.மணிவண்ணன் களமிறங்குவார் என்று முன்னர் கூறப்பட்டபோதும் அது நடைபெறாது என்று தெரியவருகின்றது.
மணிவண்ணன் தோல்வியடையக் கூடும் என்பதால், உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொண்டுள்ள சமயத்தில் அது பின்னடைவாகிவிடும் என்று கருதுவதால் அவர் போட்டியிடுவதைச் சிலவேளைகளில் தவிர்க்கக் கூடும்.
அதேநேரம் அவரது அணி சார்பில் இன்னொருவர் களமிறங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் ஆர்னோல்ட் களமிறங்குவது தொடர்பில் கட்சிக்குள் ஒருமித்த நிலைப்பாடு நேற்றுமுன்தினம் காணப்படவில்லையாயினும் நேற்று அவருக்கு ஆதரவான ஒருமித்த நிலைப்பாடு ஏற்பட்டது. ஈ.பி.டி.பி.யிலிருந்து தற்போதைய உள்ளூராட்சி சபைத் தேர்தலில் விலகியுள்ள சில உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் ஓர் உறுப்பினரும் ஆர்னோல்ட்டை ஆதரிக்கவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
சிலவேளைகளில் உறுப்பினர்களில் 50 சதவீதத்துக்கு அதிகமானவர்கள் வருகை தராது
விட்டு தெரிவை ஒத்திவைக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படக்
கூடும் என்றும் சில வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன.