யாழில் இளம் குடும்பஸ்தர் கொலையில் சிக்கிய கார்
யாழில் கடத்தப்பட்டு தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த இளம் குடும்பஸ்தரை கொலை செய்ய பயன்படுத்திய கார் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த காரானது, அராலி மேற்கு நொச்சிக்காட்டு பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றில் இருந்து, யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் இன்று (13.03.2024) மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து தெரியவருகையில்,
குறித்த குடும்பஸ்தரும் அவரது மனைவியும் காரைநகரில் இருந்து வட்டுக்கோட்டைக்கு சென்றுகொண்டிருந்தவேளை, பொன்னாலை கடற்படை முகாமுக்கு அருகில் இரண்டு கார்களில் ஆயுதங்களுடன் நின்ற சிலர் அவர்களை வழி மறித்துள்ளனர்.
விரட்டிய கடற்படையினர்
இதன்போது, இருவரும் தப்பித்து கடற்படை முகாமுக்குள் நுழைந்துள்ளதையடுத்து, கடற்படையினர் அவர்களை வெளியே விரட்டியுள்ளனர்.
இதனையடுத்து, அவர்கள் வெளியே வந்தவுடன், ஒரு காரில் மனைவியையும், அடுத்த காரில் குடும்பஸ்தரையும் ஏற்றிக்கொண்டு குறித்த குழு அங்கிருந்து சென்று குடும்பஸ்தரை வாளால் வெட்டி கொலை செய்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, கொலை குற்றச்சாட்டின் கீழ் ஐந்து சந்தேகநபர்கள் நேற்றையதினம், யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பொலிஸாரால் கிளிநொச்சியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேகரிக்கப்படும் தடயங்கள்
இந்நிலையிலேயே, அவர்கள் கொலை செய்வதற்கு பயன்படுத்திய கார் அராலி பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
அந்த இடத்திற்கு விரைந்த தடயவியல் பொலிஸார் தடயங்களை சேகரித்து வருவதோடு குறித்த குடும்பஸ்தர் மீது, காரில் வைத்தே தாக்குதல் நடாத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
அதேவேளை, பாவனையற்ற வீடொன்றிற்கு முன்னால் இருந்து இந்த கார் மீட்கப்பட்டுள்ளது. அத்துடன், காரானது, நீண்ட காலம் பாவனை இல்லாமல் இருந்தது போல் தூசிபடிந்தவாறு காணப்படுவதுடன், காரின் உள்ளே இரத்தக்கறையும் காணப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |