யாழ். மாநகர சபை வேட்புமனு நிராகரிப்பு: உயர் நீதிமன்றம் சென்றுள்ள மணி தரப்பு
யாழ்ப்பாண மாநகர சபை உள்ளிட்ட உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக உயர் நீதிமன்றில் தமிழ் மக்கள் கூட்டணி வழக்கு தொடர்ந்துள்ளது.
தமிழ் மக்கள் கூட்டணியினால் வழங்கப்பட்ட வேட்பு மனுவில் பெண் வேட்பாளர் ஒருவரின் சத்திய கூற்றில் தவறு உள்ளதாக கூறி அந்த பெண் வேட்பாளரை பட்டியலில் இருந்து நீக்கியமையால், தேவையான பெண் பிரதிநிதித்துவம் இல்லை என மாநகர சபைக்கான வேட்பு மனுவை தேர்தல்கள் திணைக்களம் முற்றாக நிராகரித்துள்ளது.
48 வேட்பாளர்கள்
வேட்பு மனுவில் தேவையான பெண் வேட்பாளர்களை உள்ளடக்கி இருந்தோம். ஆனால் ஒரு பெண் வேட்பாளரின் சத்திய கூற்றில் தவறு எனில் அவரை மாத்திரம் நீக்கி ஏனையோரை போட்டியிட அனுமதித்து இருக்க வேண்டும்.
அவ்வாறு இல்லாமல் முழு வேட்பு மனுவையும் நிராகரித்து 48 வேட்பாளர்களின் ஜனநாயக உரிமையை மறுத்துள்ளார்கள் என தமிழ் மக்கள் கூட்டணியினர் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையிலையே நேற்று ஜனாதிபதி சட்டத்தரணி ஜெப்ரி அழகரட்ணம் ஊடாக உயர் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
யாழ்ப்பாண மாநகர சபையில், முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் முதல்வர் வேட்பாளராக கொண்டு களமிறங்கிய தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பு மனுவே நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
