யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடைபெறும் சட்ட மாநாடு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அதன் கல்விப்பணியின் பிறிதொரு மைல் கல்லாக சட்ட மாநாடு ஒன்றை நடாத்துகின்றது.
குறித்த மாநாடானது இன்று(27) மற்றும் நாளை (28) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஹூவர் கலையரங்கத்தில் இடம்பெறுகின்றது.
நெருக்கடிகளுக்கூடான வழிகள் என்னும் தொனிப்பொருளில் இந்த மாநாடானது வடிவமைக்கப்பட்டுள்ளது.
பல்வேறு நோக்கங்கள்
யாழ்ப்பாண சட்ட மாநாட்டின் நோக்கங்களாக சட்டப் பரப்பில் அதிகம் பேசப்படாத விடயங்ளைப் பேசுதல், பன்மைத்துவ ஆய்வை ஊக்குவித்தல், அவ்வகை ஆய்வு முயற்சிகளை கலந்துரையாடுவதற்கான களமொன்றை அமைத்தல், சட்டப் புலமையாளர்கள் மற்றும் ஆய்வாளர்களையும் அவர்களது ஆய்வுச் சிந்தனைகளையும் ஒன்றிணைக்க வேண்டும்.
மேலும், எழுத்திலுள்ள சட்டத்திற்கும் அதன் செயற்பாட்டிற்குமான இடைவெளியைக் குறைத்தல், சட்ட மாணவர்களுக்கு சட்டத்துறை சார் ஆய்வுச் சிந்தனைகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் துறைசார் நிபுணர்களுடனான வலையமைப்பை ஏற்படுத்தல் ஆகிய பல்வேறு நோக்கங்களைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
குறித்த மாநாட்டின் முதல் நாள் நிகழ்வில் பிரதம விருந்தினராக இலங்கையின் சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்ணம் மற்றும் கௌரவ விருந்தினராக ஐக்கிய நாடுகளின் முன்னாள் நேருதவிச் செயலாளரும் சிறுவர் மற்றும் ஆயுத முரண்பாடு தொடர்பான செயலாளர் நாயகத்தின் விசேட பிரதிநிதியுமான ராதிகா குமாரசுவாமியும் கலந்து சிறப்பிக்கின்றனர்.
சட்டத்தின் எதிர்காலம்
மாநாட்டின் முதல் நாள் சிறப்பு நிகழ்வாக ஜனாதிபதி சட்டத்தரணி கனகீஸ்வரன் மற்றும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் பேராசிரியர் சொர்ணராஜா அவர்களது சிறப்புரைகள் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில், இலங்கையில் பகிரங்க சட்டத்தின் எதிர்காலம் மற்றும் அதன் நெருக்கடிகளும் சவால்களும் என்னும் தலைப்பிலான கலந்துரையாடல் நிகழ்வொன்றும் நடைபெறவுள்ளது.
மேலும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத் துறையானது 2005 ஆம் ஆண்டிலிருந்து சட்டமாணிப் பட்டத்தை வழங்குகின்ற ஒரு உயர் கல்வி நிறுவனமாக இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |