யாழ். கொட்டடி நமசிவாய வித்தியாலய அதிபரை இடமாற்ற கோரி மனு கையளிப்பு
சர்வாதிகாரமும் ஊழலும் நிறைந்த யாழ்ப்பாணம் கொட்டடி நமசிவாய வித்தியாலய அதிபரை இடமாற்றி ஆளுமை மிக்க அதிபரை நியமித்து மாணவர்களின் கல்விக்கு வழிகாட்டக்கோரி வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த மகஜரின் பிரதி வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர், யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர், வடமாகாணக் கல்விப்பணிப்பாளர், யாழ்ப்பாண வலயக்கல்விப் பணிப்பாளர், யாழ்ப்பாண கோட்டக்கல்வி பணிப்பாளர், இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்,இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் என்பவற்றுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
கொட்டடி கல்வி அபிவிருத்திக் குழு இணைப்பாளர் மு.கோமகன், யாழ் ஊடக அமையத்தில் நேற்று (27.12.2022) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
ஊழல் மோசடி
மேலும் தெரிவிக்கையில், யாழ் நகரப் பகுதியில் அமைந்துள்ள கொட்டடி நமசிவாய வித்தியாலயத்தில் கடந்த 7 வருடங்களுக்கும் மேலாக பாடசாலையின் அதிபராக இருந்து மாணவர்களையும் ஆசிரியர்களையும் தவறாக வழி நடத்தி கொட்டடி சமூகத்தையும் ஏமாற்றி பாடசாலையிலும், பாடசாலைக்கு வெளியேயும் பலவிதமான ஊழல் மோசடிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்துள்ளமை சமூகத்தில் ஆழ்ந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இப்பாடசாலையில் தரம் 1 தொடக்கம் 5 வரை 73 மாணவர்களுக்கு அரசினால் நாளொன்றுக்கு உணவிற்காக 7300 ரூபா வழங்கப்படுகிறது.
ஆனால் அதிபரால் 1300 ரூபா இக்கும் குறைவான தொகையே நாளாந்தம் செலவிடப்படுகிறது. மேலும் வலயத்திற்கும், கோட்டத்திற்கும் 7300 ரூபா என கணக்கினை காட்டியுள்ளார்.
இந்த விடயத்தினை நூதனமான முறையில் கையாண்டுள்ளார் அதாவது காய்கறிகளை கடை சென்று வேண்டுவது ஒரு ஆசிரியர், அதனை சமையல் செய்ய கொடுத்துவிடுவது ஒரு ஆசிரியர், அதன் கணக்குகளை பார்ப்பது ஒரு ஆசிரியர், பிள்ளைகளுக்கு உணவு வழங்குவது ஒரு ஆசிரியர், அதற்கான காசோலை படிவம் நிரப்புவது ஒரு ஆசிரியர் என்று ஒரு வேலையை பல ஆசிரியர்களுக்கு பிரித்து கொடுத்து இதில் தனது வேலையை காட்டியுள்ளார்.
பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரே செய்ய வேண்டிய உணவு கணக்கை ஓய்வு பெற்றுச்சென்ற பிரதி அதிபர் மூலமாக செய்து வந்துள்ள சட்டவிரோத செயற்பாடும் அண்மையில் கண்டறியப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகின்றது பின்வரும் காணொளி,



