யாழ்.பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான சர்வதேச ஆய்வு மாநாடு (photos)
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தால் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் 'விஞ்ஞானம்' சர்வதேச ஆய்வு மாநாடு இடம்பெற்றுள்ளது.
யாழ். பல்கலைக்கழகத்தின் நூலக கேட்போர் கூடத்தில் இன்று (21) இடம்பெற்றுள்ளது.
நோர்வே நாட்டின், மேற்கு நோர்வே பிரயோக விஞ்ஞானப் பல்கலைக்கழகத்தின் பங்களிப்புடன் 'புதிய இயல்பு நிலையில் ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கங்களை முன்னிறுத்தல்' எனும் தொனிப்பொருளில் சர்வதேச ஆய்வு மாநாடு இடம்பெற்றுள்ளது.
யாழ். பல்கலைக்கழக சர்வதேச ஆராய்ச்சி மாநாடுகள் (Jaffna University International Research Conference – JUICE 2022) வரிசையில் இடம்பெற்ற இந்த மாநாட்டில் நோர்வே, ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் மற்றும் இந்தியாவின் பிரபல்யமான பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த விஞ்ஞானப் பேராசிரியர்கள் கருத்துரைகளை வழங்கியுள்ளனர்.
சமர்ப்பிக்கப்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகள்
உயிரியல் விஞ்ஞானம், இரசாயன - பௌதீக விஞ்ஞானம், கணினி - தகவல் தொழில் நுட்பம், சக்தி - சூழலியல் விஞ்ஞானம், உணவு விஞ்ஞானமும் தொழில்நுட்பமும், கணிதம் - புள்ளிவிபரவியல், விஞ்ஞானக்கல்வி எனும் உபதலைப்புக்களில் சர்வதேச மற்றும் இலங்கை ஆராச்சியாளர்களால் 43 ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இந்த மாநாட்டுக்கு நோர்வே நாட்டின் இலங்கைத் தூதரகம், நோர்வேயின் திறன் மற்றும் உயர் கல்விக்கான பணிப்பாளர் அலுவலகம் என்பன நிதிப்பங்களிப்பை வழங்கியுள்ளன. மேலும், யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, முன்னாள் துணைவேந்தர்களான பேராசிரியர் என். சண்முகலிங்கன் உட்பட பலர் கலந்துகொண்டுள்ளனர்.
நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு நிகழ்வுகள், இணைய வழியிலும் நேரலையாகவும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.