யாழில் சினிமாப் பாணியில் கைதியை மடக்கிப் பிடித்த பொலிஸார்
வைத்தியசாலையில் இருந்து தப்பி ஓடிய விளக்கமறியல் கைதி ஒருவரை சினிமாப் பாணியில் பொலிஸார் மடக்கிப் பிடித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
மந்திகையில் உள்ள பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக நேற்று முன் தினம் (13.01.2023) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தப்பி சென்றமை தொடர்பில் வழக்குகள்
நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் ஹெரோயின் வழக்கு மற்றும் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் திருட்டு சம்பந்தமான வழக்குகளில் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட வல்வெட்டிதுறை பகுதியை சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் ஒருவர் சீர்திருத்த பள்ளியிலிருந்தும் இரண்டு தடவைகள் தப்பி வந்தமை தொடர்பில் வழக்குகள் நிலுவையில் இருந்தன.
இச்சந்தேகநபர் கடந்த வியாழக்கிழமை (12.01.2023) பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட போது தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
விளக்கமறியல் கைதி
வெள்ளிக்கிழமை (13.01.2023) வைத்தியசாலைக்கு சென்ற பருத்தித்துறை பதில் நீதவான் அலெக்ஸ்ராஜா எதிர்வரும் 25ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து சற்று நேரத்தில் விளக்கமறியல் கைதி வைத்தியசாலையில் இருந்து தப்பி ஓடிய போது பொலிஸார் அவரை துரத்திச்சென்று சினிமாப் பாணியில் மடக்கி பிடித்து வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
பின்னர் குறித்த கைதி சிறைச்சாலை வாகனம் மூலம் யாழ். சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
