தமிழர் பகுதியில் பக்தர்கள் புடைசூழ மகோற்சவ திருவிழாக்கள்(Photos)
யாழ்.தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான வருடாந்த மகோற்சவப் பெருவிழா இன்று (18.08.2023) காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
12 திருவிழாக்களைக் கொண்ட வருடாந்த மகோற்சவத்தில் எதிர்வரும் 27ஆம் திகதி சப்பறத் திருவிழாவும், 28ஆம் திகதி தேர்த்திருவிழாவும், 29ஆம் திகதி தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் 2023 ஆம் ஆண்டு வருடாந்தப் பெருவிழா நாளை (19.08.2023)அதிகாலை திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 4ஆம் திகதி காலை தீர்த்தோற்சவத்துடன் நிறைவு பெறவுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
உற்சவப் பெருவிழா நிகழ்வுகள் இன்று(18.08.2023) இரவு கிராம சாந்திக் கருமங்கள் நடைபெற்று நாளை (19.08.2023)அதிகாலை 4.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஆலயத் திருவிழாக்கள் 5நாட்கள் நடைபெறவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பின்னர் பத்து நாட்கள் குடித்திருவிழாக்கள் இடம்பெற்றதைத் தொடர்ந்து எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 3 ஆம் திகதி பிற்பகல் தேரோட்டம் நடைபெற்று பின்னர் அன்று இரவு முனைக்காடு வீரபத்திர சுவாமி ஆலய முன்றலில் திருவேட்டையுடன் மறுநாள் அதிகாலை தீர்த்த உற்சவத்துடன் நிறைவு பெறவுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
செய்தி-ருசாத்







