கடற்றொழில் அமைச்சர் தலைமையில் இடம்பெற்ற யாழ். ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டமானது அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இன்று(19.06.2026) இடம்பெற்ற ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில், வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் கலந்து கொண்டுள்ளதுடன், யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.
விவசாயிகளை வாழ வைப்பதாகக் கூறிவிட்டு இன்று நட்டாற்றில் கைவிட்டுள்ளது அநுர அரசு - சஜித் குற்றச்சாட்டு
இதன்போது, ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் கடற்றொழி்ல் நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகரின் தலைமை உரையாற்றியுள்ளார்.

யாழ். மாவட்டத்தில் அபிவிருத்தி நடவடிக்கை
இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது மாவட்டத்தினுடைய அபிவிருத்தி தொடர்பான விடயங்களை கலந்துரையாடும் கூட்டமாகும். இந்தக் கூட்டம் மக்களுக்கு நன்மையளிப்பதாக மட்டுமே அமைய வேண்டும்.
மேலும், இந்தக் கூட்டத்திற்கு வருகைதந்த அனைவரும் மரியாதைக்குரியவர்கள். அவர்களுக்கு வழங்க வேண்டிய மரியாதையில் எந்த குறையும் இருக்கக் கூடாது. அதற்கு ஏற்ற வகையில் எல்லோரும் கலந்துரையாடலை மேற்கொள்ள வேண்டும்.
நாம் எல்லோரும் மக்கள் பிரதிநிதிகள் மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெறுகின்றோம் என்பதை கருத்தில் கொண்டு ஒவ்வொருவருடைய செயற்பாடும் அமைய வேண்டும்.
யாழ். மாவட்டத்தில் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது அரச அதிகாரிகள் அக்கறையுடன் செயற்பட்டுள்ளார்கள் என்பதை இந்த அறிக்கையின் ஊடாக அறிந்து கொள்ளக்கூடியதாகவுள்ளது.
மேலும், யாழ். மாவட்டத்தில் கடந்த 06 மாதங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக நோக்கினால், மீள் குடியேறிய மக்களுக்காக 827 வீடுகளும், வறுமைக்குள்ளான ஏனைய மக்களுக்காக 281 வீடுகளும், சமுர்த்தி பயனாளிகளுக்காக 45 வீடுகளும் வழங்கப்பட்டுள்ளன.
நிதியுதவித் திட்டம்
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 379 வீடுகளுக்கான திருத்த வேலைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், 50 இலட்சம் ரூபாய்க்கு ஒரு வீடும் வழங்கப்பட்டுள்ளது.
அதேபோன்று விவசாய திட்டங்களுக்காக 06 திட்டங்கள் வகுக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டு வருகின்றதாகவும், சுற்றுலா அபிவிருத்திக்காக 04 பாரிய திட்டங்களும், விளையாட்டு அபிவிருத்தி திட்டங்களுக்காக 05 திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதேபோன்று போக்குவரத்து அபிவிருத்திக்காக பாரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், கிராமிய வீதி புனரமைப்புக்கு ரூபா 250 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளடங்கலாக ரூபா 2500 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலாக நெடுந்தீவிற்கான வடதாரகை மற்றும் நெடுந்தாரகை கடல் போக்குவரத்து சேவைகள் தற்பொழுது செயற்பட ஆரம்பித்துள்ளது.
அதேபோன்று சமூக சக்தியினால் பல திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், அதில் 719 திட்டங்கள் தெரிவு செய்யப்பட்டு ரூபா 652 மில்லியனில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
தேசிய உற்பத்தி திறன் செயற்பாடுகளுக்காக 17 திட்டங்களும், அனர்த்ததினால் பாதிக்கப்பட்ட உட்கட்டுமானங்களை மீட்டெடுப்பதற்காக 03 திட்டங்களுக்காக ரூபா 32 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிள்கள் வழங்கும் திட்டம்
நிலப் பயன்பாட்டு விருத்திக்காக 5 திட்டங்கள் முன்மொழியபட்டுள்ளதுடன், யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய பாரிய திட்ட முன்மொழிவுகள் ஒருங்கிணைப்பு குழு அலுவலகத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டிற்கு அப்பால் உலக வங்கி மற்றும் சர்வதேச வங்கிகளிடமிருந்து மேலும் நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படவுள்ளது.
மேலும், இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் கடற்றொழில் அமைச்சின் கீழ் உள்ள உத்தியோகத்தர்களுக்கு 125 மோட்டார் சைக்கிள்கள் வழங்குவதற்கான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அத்துடன், யாழ். மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களை மேற்கொள்ளும் போது பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது, இதற்கு அனைத்து அதிகாரிகளின் ஒத்துழைப்பும் வேண்டும்.
யாழ். மாவட்டத்தில் போதை பொருள் பாவணையானது கணிசமான அளவிற்கு குறைந்துள்ளது. அண்மையில் இலஞ்ச ஊழல் செயற்பாடுகளை ஒழிப்பதற்கான அலுவலகம் யாழ்ப்பாண மாவட்டத்தில் திறக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கு அனைத்து அதிகாரிகளின் ஒத்துழைப்பும் அர்ப்பணிப்பும் தேவை என குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வைத்தியர் சண்முகநாதன் ஸ்ரீ பவானந்தராஜா, ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், அர்ச்சுனா இராமநாதன் வடக்கு மாகாண சபையின் பேரவைத் தலைவர், பிரதம செயலாளர், மாகாண அமைச்சின் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், வட மாகாண கடற்படைத் தளபதி, பிரதி பொலிஸ்மா அதிபர், முப்படைகளின் அதிகாரிகள் பிரதிநிதிகள், திணைக்களத்தலைவர்கள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.


