நிதி வழங்கியும் யாழ். மாநகரத்தில் கழிவகற்றல் முறையாக இடம்பெறவில்லை! கபிலன் குற்றச்சாட்டு
யாழ்ப்பாணம் மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் தனியார் உழவு இயந்திரங்கள் மூலம் கழிவகற்றுவதற்கு ஒரு கிலோ மீற்றருக்கு 210 ரூபா வீதம் மாதம் 50 இலட்சம் ரூபாவும், வருடத்துக்கு 6 கோடி ரூபாவும் சபை நிதியில் இருந்து வழங்கப்படும் போதும் கழிவகற்றல் முறையாக இடம்பெறவில்லை என தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் கபிலன் சுந்தரமூர்த்தி தெரிவித்துள்ளார்.
யாழ். மாநகரசபையின் அமர்வு நேற்று இடம்பெற்றது.
இதன்போது மாநகர சபைக்குச் சொந்தமான 17 உழவு இயந்திரங்கள் மூலமும், இரண்டு கழிவு சேகரிக்கும் வாகனங்கள் மூலமும், 16 தனியார் உழவு இயந்திரங்கள் மூலமும் யாழ். மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் கழிவகற்றல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தனியார் உழவு இயந்திரங்கள் மூலம் கழிவகற்றுவதற்கு ஒரு கிலோமீற்றருக்கு 210 ரூபா வீதம் மாதம் 50 இலட்சம் ரூபாவும், வருடத்துக்கு 6 கோடி ரூபாவும் சபை நிதியில் இருந்து வழங்கப்படுவதாக சபை அமர்வில் சுட்டிக்காட்டப்பட்டது.
பிரபல தனியார் வைத்தியசாலையில் கழிவகற்றல்
இது தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாநகர சபை உறுப்பினர் கபிலன் கருத்துத் தெரிவிக்கையில், "தனியார் உழவு இயந்திரங்கள் யாழ். மாவட்டத்தில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலைகளின் கழிவகற்றலுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
கல்லுண்டாய் வெளியில் மருத்துவக் கழிவுகள் எரிக்கப்பட்டிருந்தன. அங்கு வலிப்புக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகள், வலி நிவாரணியாகப் பயன்படுத்தப்படும் மருத்துவக் கழிகள் எரியூட்டுள்ளன. அவை தொடர்பான வீடியோ ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. மாதம் 50 இலட்சம் ரூபா செலவழித்து கழிவகற்றல் இடம்பெற்றிருந்தால் கல்லுண்டாயில் குப்பைகள் மலைபோல் குவிந்து இருக்க வேண்டும்.
ஆனால், கல்லுண்டாய் வெளியில் குப்பைகள் நில மட்டத்தோடு இருக்கின்றன. குப்பைகள் எரிந்த நிலையில் உள்ளன. இங்கு குப்பைகள் யாராலும் திட்டமிட்டு எரியூட்டப்படுகின்றதா? அல்லது தானாகத் தீப் பிடிக்கின்றதெனில் அது எவ்வளவு பயங்கரமானது என்பது தொடர்பில் நாம் ஆராய வேண்டும்.
இந்த விடயம் தொடர்பில் நிபுணர்களின் விஞ்ஞானபூர்வமான அறிக்கை பெறப்பட வேண்டும். கல்லுண்டாய் வெளியில் இறைச்சிக் கழிவுகள், பம்பஸ்கள், மருத்துவக் கழிவுகள் என்பன காணப்படுகின்றன.
முறையான ஆய்வுகள்
இவை தொடர்பில் முறையான ஆய்வுகள் மேற்கொள்ளப்படாமல் நிலத்தை மட்டப்படுத்த முடியாது. திண்மக் கழிவகற்றலுக்காக வருடத்துக்கு 6 கோடி ரூபாவைச் செலவழித்த போதும் அங்கு காணப்படும் குப்பைகளின் அளவு குறைவாகவே உள்ளது. குப்பைகள் காலகாலமாகத் தொடர்ந்தும் எரியூட்டப்பட்டு வருகின்றன.
அயலில் உள்ள பொதுமக்கள் இதற்குச் சாட்சி. கல்லுண்டாய் வெளியில் மருத்துவக் கழிவுகள் இருப்பதால் திட்டமிடப்பட்டு எரியூட்டப்படலாம் என்ற சந்தேகம் உள்ளது. இதனைத் தடுப்பதற்காக யாழ். மாநகர சபைக்குச் சொந்தமான 17 உழவு இயந்திரங்கள் மாத்திரமே மருத்துவக் கழிவுகளைச் சேகரிக்க வேண்டும்.
அதன்போது பொதுச் சுகாதாரப் பரிசோதகரும் உடன் இருக்க வேண்டும். திண்மக் கழிவகற்றல் முறையாக முகாமை செய்யப்பட வேண்டும். கழிவகற்றல் முறைமைகளுக்காக நிதி ஒதுக்குவதற்கு மத்திய அரசு தயாராகவுள்ளது. இதனை மத்திய அரசின் பிரதிநிதியாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
தனியார் உழவு இயந்திரங்களால் மேற்கொள்ளப்படும் கழிவகற்றல் தொடர்ந்தும் அவதானிக்கப்பட வேண்டும். தனியார் கழிவகற்றலில் பாரிய பிரச்சினைகள் உள்ளன. இது பற்றிய தரவுகள் எங்களுக்குக் கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த விடயங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்." - என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam
