நாட்டில் இடம்பெற்ற இருவேறு விபத்து சம்பவங்கள்!: பரிதாபமாக உயிரிழந்த 3வயது சிறுமி (Photos)
மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுவாஞ்சிகுடி மாரியம்மன் கோயில் வீதியில் அமைந்துள்ள வீட்டுத்திட்டத்தில் சிறியரக பிளாஸ்டிக் தொட்டி ஒன்றினுள் 3வயது சிறுமி தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று (21) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
குறித்த சிறுமி வீட்டிலிருந்த பிளாஸ்டிக் தொட்டியில் கையிலிருந்த ஜம்பு பழத்தை போட்டு பின்னர் அந்த பழத்தை மீண்டும் எடுப்பதற்கு முயற்சித்த வேளை சிறுமி தலைகீழாக அந்த சிறிய ரக தொட்டியினுள் தவறி வீழ்ந்துள்ளார்.
23 அங்குலம் உயரம் கொண்ட அந்த சிறியரக தொட்டியினுள் 8 அங்குலம் அளவில் அதனுள் தண்ணீர் இருந்துள்ளது.
தங்கை வீழ்ந்துள்ளதை அவதானித்த சிறுமியின் 5 வயதுடைய அண்ணா வீட்டிற்குள் சமைத்துக் கொண்டிருந்த தாயிடம் கூறியுள்ளார். உடன் விரைந்து மகளை மீட்டதாய் அயலவர்களின் உதவியுடன், உடனடியாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியாசலைக்குக் கொண்டு சென்றுள்ளனர். எனினும் சிறுமி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த சிறுமியின் சடலத்தை, களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதவான் நீதிமன்ற நீதிபதி கே.ஜீவராணியின் உத்தரவுக்கமைய இன்று சடலத்தைப் பார்வையிட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெத்தினம், பிரேத பரிசோதனைக்குட்படுத்தும்படியும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
செய்திகள்: ருசாத்
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று பேருந்திற்கு வழி விட முயன்ற சமயம் சுமார் 15 அடி வெள்ள வாய்க்காலிற்குள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த சம்பவம் இன்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது .
மோட்டார் சைக்கிளை செலுத்தியவரின் சாதுரியம் காரணமாக சிறு காயங்களுடன் தப்பியவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.