தமிழரசுக் கட்சியின் பிரித்தானிய கிளையும் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு!
எதிர்வரும் செப்டெம்பர் 21இல் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற தமிழ் பொது வேட்பாளருக்கு இலங்கைத் தமிழரசு கட்சியின் பிரித்தானியாவுக்கான கிளையானது (ITAK UK(Forum)) தனது முழுமையான ஆதரவை தெரிவிக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரித்தானிய கிளை வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “மேற்படி விடயம் சார்பாக ஐக்கிய இராச்சியத்தில் உள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி கிளையானது மாதாந்த கூட்டங்களில் பல தடவை விவாதித்தது.
தாயக மக்களுடைய பெரும்பான்மை விருப்பம்
அக்கூட்டங்களில் கலந்து கொண்ட பெரும்பான்மையினருடைய வேண்டுகோளுக்கும், விருப்பிற்கும் இணங்க, 26 மே 2024 அன்று நடந்த பொதுக் கூட்டத்தில் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.
எனினும் தாயகத்தில் தாய் கட்சியின் முடிவுகள் எதுவும் அறிவிக்கப்படாமையினால், தொடர்ந்தும் இந்த விவகாரம் எமது மாதாந்த கூட்டத் தொடரில் விவாதிக்கப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது தமிழரசு கட்சியின் மத்திய குழு, தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவளிப்பதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்ட நிலையிலும், கட்சியின் மாவட்டக் கிளைகளுக்கு இடையே பல்வேறு கருத்து முரண்பாடுகளும், ஆதரவும், எதிர்ப்பும் என்ற நிலை தோன்றியிருந்த நிலையில் தாயகத்தில் உள்ள தமிழரசு கட்சியின் மாவட்ட கிளைகள் பெரும்பாலானவை மத்திய குழுவின் முடிவை நிராகரித்து, மீறி தமிழ் பொது வேட்பாளர்களுக்கு ஆதரவளிப்பது என்ற தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர்.
இந்நிலையில் தாயக மக்களுடைய பெரும்பான்மையினருடைய விருப்பினை கருத்தில் கொண்டும், புலம்பெயர்ந்து வாழ்கின்ற பெரும்பான்மை மக்களுடைய விருப்பினையும் கருத்தில் கொண்டும், இந்த விடயத்தை அறிவியல் பூர்வமாகவும், அரசியல் ராஜதந்திர நடைமுறைக்கு ஊடாகவும். தத்துவார்த்த ரீதியிலும் ஆராய்ந்து இந்த முடிவை எடுத்திருக்கிறோம்” என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கையிலிருக்கும் கிளியை விட்டுவிட்டு மரத்திலிருக்கும் குருவியைப் பிடிக்க முயலாதீர்கள் : பிரசாரத்தில் ஹரின்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |