மக்களைச் சட்டத்தினாலும் நெருக்கடிக்குட்படுத்துவது நியாயமற்றது: சமத்துவக் கட்சி (Photos)
பொருளாதார நெருக்கடி, அரசியல் நெருக்கடி போன்றவற்றினால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களைச் சட்டத்தினாலும் நெருக்கடிக்குட்படுத்துவது நியாயமற்றது என சமத்துவக் கட்சி தெரிவித்துள்ளது.
அவசரகாலச் சட்டத்தை அரசாங்கம் மீண்டும் பிறப்பித்திருப்பது நாட்டுக்குத் தீங்கையே விளைவிக்கும். மேலும் நெருக்கடியை அதிகரித்து, நிலைமையை மோசமாக்கும். ஆகவே உடனடியாகவே ஜனாதிபதி அவசரகாலச் சட்டத்தை ரத்துச் செய்து நீக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பாக சமத்தவக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான முருகேசு சந்திரகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இன்று நாட்டுக்குத் தேவையானது, சுமை குறைப்பே தவிர, சுமை கூட்டுதல் அல்ல. மக்கள் பொருளாதார நெருக்கடியிலிருந்தும் அரசியல் நெருக்கடியிலிருந்தும் மீள்வதற்கே விரும்புகிறார்கள். அதையே அரசாங்கம் செய்ய வேண்டும்.
மக்களுக்கு இன்று பெட்ரோலும் டீசலும் எரிவாயுவும் உணவுப்பொருட்களுமே தேவை. இதனோடு தமது நெருக்கடிகளைத் தீர்த்து நல் வாழ்வுக்கு உதவக்கூடிய ஆட்சியையே அவர்கள் விரும்புகிறார்கள். அவற்றை வழங்குவதற்குப் பதிலாக அவசரகாலச் சட்டத்தை அரசாங்கம் வழங்குகிறது. இது அரசாங்கத்தின் இயலாமையையே காட்டுகிறது.
மக்களுக்குத் தேவையானதை வழங்குவதற்குப் பதிலாக மக்களுக்குத் தேவையில்லாத, மக்கள் விரும்பாத அவசரகாலச் சட்டத்தை அரசாங்கம் திணிக்க முயற்சிப்பது தவறானதாகும். பொருளாதார நெருக்கடி, அரசியல் நெருக்கடி போன்றவற்றினால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களைச் சட்டத்தினாலும் நெருக்கடிக்குட்படுத்துவது நியாயமற்றது. அவசரகாலச் சட்டத்தை மக்கள் விரும்பவில்லை.
மக்கள் மட்டுமல்ல, இந்த நாட்டிலுள்ள அரசியற் கட்சிகள் தொடக்கம் சர்வதேச சமூகம் வரை எவருமே விரும்பவில்லை. அவசரகாலச் சட்டத்தைப் பிறப்பிப்பதன் மூலம் நாடும் அந்தக் காலகட்டமும் மோசமான நிலைக்குத் தள்ளப்படுவதே உலக அனுபவமாகும். இதனால்தான் உலகம் இன்று அவசரகாலச் சட்டத்துக்கு எதிராக நிற்கிறது.
இந்த உலக
அனுபவத்தையும் இலங்கையின் கடந்த கால அனுபவங்களையும் புறக்கணித்து விட்டு,
மக்களுக்கு எதிரான சட்டத்தை அரசாங்கம் பிடிவாதமாகத் திணித்திருப்பதை நாம்
வன்மையாகக் கண்டிக்கிறோம்'' இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

253 பந்துகளில் 266 ரன் விளாசிய வீரர்! 228 ரன் குவித்த கேப்டன்..ஒரே இன்னிங்சில் இருவர் இரட்டைசதம் News Lankasri

பிடிப்பட்ட ரித்தீஷ்.. குத்தாட்டம் போட்ட செல்வி மகன்- காதல் தோல்விக்கு கம்பெனி கொடுத்த அம்மா Manithan
