நீதிபதி சரவணராஜாவின் வெளியேற்றத்திற்கு மூலகாரணமாக செயற்பட்டவர் சரத்வீரசேகர: பகிரங்க எச்சரிக்கை
உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டினை விட்டு வெளியேறியிருக்கும் நீதிபதி சரவணராஜாவின் வெளியேற்றத்திற்கு மூல காரணமாக செயற்பட்ட சரத்வீரசேகர, வடக்கில் கட்டளை தளபதியாக செயற்பட்ட பொழுது அதிகளவு எமது தமிழ் உறவுகள் காணாமலாக்கப்பட்டிருக்க வேண்டும் என்றே சிந்திக்க தோன்றுகின்றது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்துள்ளார்.
சுதுமலை பகுதியில் இன்று(29.09.2023) இடம்பெற்ற இரண்டாம் மொழிக்கற்கைகள் பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் பொழுதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக உயிர் அச்சுறுத்தல் காரணமாக பதவி விலகியுள்ள நீதிபதி: எம்.ஏ.சுமந்திரன் (Video)
உயிர் அச்சுறுத்தல்
இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,
இந்த மொழியினை தமிழர்கள் எதிர்க்கவில்லை எம்மை எதிர்க்கச் செய்தார்கள். பண்டாரநாயக்க தனிச்சிங்கள சட்டம் கொண்டுவந்த போது நாங்கள் முழுமையாக எதிர்த்தோம்.
முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய நல்லாட்சி காலத்தில் பல விடயங்களை செய்திருக்கின்றார். நல்லிணக்கம் பற்றி எப்பொழுதும் பேசுபவர் ஒரு இனவாதியாக செயற்படாதவர். சபாநாயகராக இருந்தவர் இருந்த பொழுதும் அவர் சுயநலமாக செயற்பட்டவர் கிடையாது. அனைவராலும் அவர் மதிக்கப்பட்டவர்.
ஆனால் இன்று என்ன நடக்கின்றது, சரத் வீரசேகர போன்ற இனவாதி தனது பேச்சுக்கள் மூலம் நீதிபதிக்கு எதிராக சிங்கள மக்களினை பௌத்த துறவிகளினை தூண்டிவிடுகின்றார்.
இன்று முல்லைத்தீவு நீதிபதி உயிர் அச்சுறுத்தல் காரணமாக பதவியில் இருந்து விலகி நாட்டைவிட்டு வெளியேறிச் சென்றிருக்கின்றார்.
நான் நினைக்கவில்லை சட்டமா அதிபர் திணைக்களம் இவ்வாறான ஒரு கடிதத்தினை இதுவரை காலமும் பெற்றுகொண்டிருக்காது.
செம்மணி படுகொலை புதைகுழி மீட்பின் போது செயற்பட்ட நீதிபதி அருள்சாகரன் இவ்வாறு அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறி இருந்தார்.
இன்று காணாமலாக்கப்பட்டோர் தொடர்பாக வடக்கில் அப்பொழுது கட்டளை தளபதியாக செயற்பட்ட சரத்வீரசேகரவின் காலத்தில் தான் அதிகமானோர்கள் காணாமலாக்கப்பட்டிருப்பார்கள் போல தெரிகின்றது.
ஆகவே இவ்வாறான பிரிவினைகளை தடுப்பதற்கு இரண்டாம் மொழியின் தேவை இருக்கின்றது. அபிவிருத்தி நோக்கி செல்வதற்கு சிங்களம் தேவை இருக்கின்றது. மொழிக்கும் எங்களுக்கும் அரசியல் பகைமை இல்லை. இது அவர்களால் அன்று உருவாக்கப்பட்ட சட்டமூலங்களினாலே எம்மை எதிர்க்க வைத்தது. ஒரு மொழி இருநாடா ஒரு நாடா என அன்றைய காலத்தில் கேட்கப்பட்டது என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |