யாழில் திருநங்கை ஒருவரின் உருக்கமான கோரிக்கை
திருநங்கைகளை மனதளவில் புண்படுத்தும் நடவடிக்கைளை செய்ய வேண்டாம் என யாழ்ப்பாணத்தை சேர்ந்த திருநங்கை ஷாலினி உருக்கமான கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.
அச்சுவேலியை பிறப்பிடமாக கொண்ட ஷாலினி தற்போது காக்கைத்தீவு பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்றார்.
இந்த நிலையில் அவர் பல விடயங்களை பகிர்ந்து கொண்டுள்ளதுடன், மக்களிடம் கோரிக்கையொன்றையும் முன்வைத்துள்ளார்.
வித்தியாசமாக பார்க்கும் மக்கள்
அவர் மேலும் தெரிவிக்கையில், 12 வயதிலேயே நான் ஒரு திருநங்கை என்று உணர்ந்தேன். எனக்கு பெற்றோர் இல்லை. உறவினர்களுடனே நான் இருந்து வந்த நிலையில் நான் ஒரு திருநங்கை என்று உணர்ந்த பின்னர் உறவினர்கள் என்னை விரட்டிவிட்டனர்.
இந்த நிலையில் நான் தற்போது காக்கைத்தீவு பிரதேசத்தில் வாழ்ந்து கொண்டு ஹோட்டலொன்றில் சுத்தப்படுத்தல் வேலையை செய்து வருகின்றேன். எனினும் நாளாந்தம் நான் வீதியில் சென்று வரும் போது என்னை பலரும் வித்தியாசமாக பார்க்கின்றனர்.
அதில் சிலர் அலி, ஒன்பது என்றெல்லாம் கேலி செய்கின்றனர். பெண்கள் என்னை மதிப்பதுடன் எனக்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளனர். என்ற போதும் ஆண்களே என்னை மனதளவில் புண்படுத்தும் வகையில் நடந்து கொள்கின்றனர்.
உதவ யாரும் இல்லை
யாழ்ப்பாணத்தில் மொத்தமாக சுமார் 5600 திருநங்கைகள் இருக்கின்றனர். அப்பிடியிருந்த போதும் நிறைய பேர் தன்னை வெளிகாட்டிக் கொள்வதில்லை என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் முழுமையாக தான் பெண்ணாக மாறுவதற்கு சத்திர சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் எனினும் தனக்கு அதற்கான உதவிகளை வழங்க யாரும் இல்லை என்றும் கவலை தெரிவித்துள்ளார்.
மேலும், திருநங்கைகளை புண்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை தவிர்த்துக் கொள்ளுமாறும், அது தம்மை மிகவும் கஷ்டப்படுத்துவதாகவும் அவர் மிகவும் உருக்கமாக கோரிக்கை முன்வைத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |