கொள்கலன்கள் விடுவிப்பு விவகாரம்: தெரிவுக்குழுவின் விசாரணைகள் நிறைவு
கொழும்புத் துறைமுகத்திலிருந்து கட்டாய பௌதீகப் பரிசோதனை எதவுமின்றி 323 சரக்குக் கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழு, தனது விசாரணைப் பணிகளை முழுமையாக நிறைவு செய்துள்ளது.
அதன் இறுதி அறிக்கையை அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தெரிவுக்குழு சமர்ப்பிக்கவுள்ளது.
அறிக்கை நாடாளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாகச் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர், அது முதலில் குழுவின் உறுப்பினர்களிடையே பகிரப்பட்டு, அவர்களின் பரிந்துரைகளையும் உள்ளடக்கியே இறுதி வடிவம் பெறவுள்ளது.
விடுவிப்பு நடைமுறைகள்
எந்தவித கட்டாய சுங்கப் பரிசோதனைகளுமின்றி இவ்வளவு பெரிய அளவிலான கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை, இலங்கை சுங்கம் மற்றும் துறைமுக நடவடிக்கைகளின் பாதுகாப்பு, கண்காணிப்பு மற்றும் விடுவிப்பு நடைமுறைகள் குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பியிருந்தது.

பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட இந்தக் கொள்கலன்களுக்குள் போதைப்பொருள்கள் அல்லது தடைசெய்யப்பட்ட பொருட்கள் எவையேனும் அடங்கியிருக்கலாம் என எதிர்க்கட்சியினர் எழுப்பிய தொடர் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தலைமையில் இந்த விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.