வடக்கில் உள்ள தொல்லியல் மையங்களின் உரிமைகள் தொடர்பில் தொடர்ந்தும் தொய்வு நிலை
வடக்கு மாகாணத்தில் அடையாளம் காணப்பட்ட 479 தொல்பொருள் தளங்களில் 252 இடங்களின் உரிமை இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளதாக, தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் அண்மைய அறிக்கையின்படி, தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023, ஜூலை வரை, இந்த தளங்கள் முறையாக கையகப்படுத்தப்படவில்லை, அத்துடன் அவற்றின் எல்லைப் பதிவுகள் இன்னும் நிறுவப்படவில்லை. அதேநேரம், அவற்றின் பாதுகாப்பிற்காக வர்த்தமானி அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை.
முன்னதாக, வடக்கு மாகாணத்தில் பிராந்திய தொல்லியல் அலுவலகங்கள் அமைக்கப்பட்டு, 2018ஆம் ஆண்டு இடங்களை ஆய்வு செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
சேதங்கள்
எனினும், முறையான வர்த்தமானியின்மை காரணமாக பல இடங்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன.
குறிப்பாக, நாகதம்பிரான், வவுனிக்குளம், சிவபுரம் ஸ்ரீ மலை ஆலயம் ஆகிய இடங்களில் உள்ள பல குறிப்பிடத்தக்க தொல்பொருள் இடங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.
நெடுங்கேணி சிவநகர், குளமுறிப்பு, கொடியமலை போன்ற இடங்களிலும் இதுபோன்ற சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
எல்லை நிர்ணயம்
மேலும், வெடுக்குநாரிமலை, நெளுக்குளம், சமலங்குளம் போன்ற முக்கிய இடங்கள், 2008ஆம் ஆண்டிலேயே பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களாக அறிவிக்கப்பட்ட போதிலும், இன்னும் எல்லை நிர்ணயம் செய்யப்படவில்லை அல்லது வர்த்தமானியில் வெளியிடப்படவில்லை.
வடக்கு மாகாணத்தில் உள்ள பெரும்பாலான தொல்பொருள் தளங்களில் பூர்வாங்க அகழ்வாராய்ச்சிகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், விரிவான ஆய்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை என்றும் கணக்காய்வில் தெரியவந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |