காசாவின் செஞ்சிலுவை சங்க அலுவலகம் அருகில் தாக்குதல் மேற்கொண்ட இஸ்ரேல்
காசாவில் அமைந்துள்ள தமது அலுவலகங்கள் எறிகனைத் தாக்குதலால் சேதமடைந்துள்ளதாகவும், அலுவலக வளாகத்தைச் சுற்றி தஞ்சம் அடைந்திருந்த 22 பேர் கொல்லப்பட்டதாகவும் 45 பேர் காயமடைந்ததாகவும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது.
தமது சங்கத்தின் அலுவலகம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் நேற்று(22) கனரக எறிகணை தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக செஞ்சிலுவை சங்கம் குறிப்பிட்டுள்ளது.
நேரடித் தாக்குதல்
இந்தநிலையில், பொதுமக்கள் மற்றும் மனிதாபிமான வசதிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க அனைத்து தரப்பினரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கடப்பாடு இருப்பதாக செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.
எனினும் ஆரம்ப விசாரணையின் அடிப்படையில் செஞ்சிலுவை சங்கத்திற்கு எதிராக நேரடித் தாக்குதல் எதுவும் நடத்தப்படவில்லை என்று இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது.
இதற்கிடையில், இந்தத் தாக்குதலைக் கண்டிப்பதாகவும், சுதந்திரமான விசாரணைக்கு அழைப்பு விடுத்ததாகவும், பொறுப்பானவர்கள் பொறுப்புக்கூற வேண்டும் என்றும், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |