காசா மீது தொடரும் இஸ்ரேல் தாக்குதல்கள்: ஒரே நாளில் 28 பேர் பலி
காசா பகுதி முழுவதும் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட இஸ்ரேல் வான்தாக்குதல்களில் குறைந்தது 28 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குவதாக, ஹமாஸ் நிர்வகிக்கும் சிவில் பாதுகாப்பு அமைப்பு கூறியுள்ளது.
தெற்கு காசாவின் கான் யூனிஸ் நகரில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த ஒரு கூடாரத்தை ஹெலிகாப்டர் தாக்கியதில் பலர் உயிரிழந்ததாகவும், இது அண்மைய காலத்தில் நடந்த மிகக் கடுமையான தாக்குதல்களில் ஒன்றாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மத்தியஸ்தம் காரணமாக கடந்த அக்டோபரில் அமலுக்கு வந்த இரண்டாம் கட்ட போர் நிறுத்த உடன்படிக்கைக்கு பின்னர், இத்தாக்குதல்கள் மிகக் கடுமையானவை என பாலஸ்தீனியர்கள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை ஹமாஸ் போர் நிறுத்த உடன்படிக்கையை மீறியதற்குப் பதிலடியாக இந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை உறுதிப்படுத்தியுள்ளது.
கிழக்கு ரஃபா பகுதியில் நிலத்தடிக் கட்டமைப்புகளில் இருந்து வெளியேறிய “எட்டு தீவிரவாதிகள்” அடையாளம் காணப்பட்டதாகவும், அவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
மேலும், ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்த நான்கு தளபதிகள், ஆயுத களஞ்சியங்கள், ஆயுத உற்பத்தி மையங்கள் மற்றும் மத்திய காசாவில் உள்ள இரண்டு ஏவுகணை தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தரப்பு கூறியுள்ளது.
இந்த தொடர்ச்சியான தாக்குதல்கள், காசா மீது இஸ்ரேல் அரசின் கொடூரமான அழிப்பு போராட்டம் தொடர்கிறது என்பதற்கான சாட்சி என ஹமாஸ் இயக்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் அமெரிக்கா உடனடியாக தலையிட வேண்டும் என ஹமாஸ் வலியுறுத்தியுள்ளது. 2
025 அக்டோபர் 10ஆம் திகதி போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததிலிருந்து மட்டும் 509 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாகவும், நான்கு இஸ்ரேல் வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.