இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் : பல மில்லியன் டொலர்களை இழக்கும் அபாயத்தில் இலங்கை
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினருக்கு இடையிலான தற்போதைய போர் நிலைமையினால் இலங்கை பல மில்லியன் டொலர்களை இழக்க வேண்டிய நிலை ஏற்படும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக அமையத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
வெளிநாடுகளிலுள்ள இலங்கை தொழிலாளர்களால் மாதாந்தம் 500 மில்லியன் டொலர் வருமானம் கிடைக்கின்றது. இந்த ஆண்டில் மாத்திரம் அரசாங்கத்துக்கு 3.5 பில்லியன் டொலர் வருமானம் வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களால் கிடைத்துள்ளது.
எரிபொருள் விலை அதிகரிக்கலாம்
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இதனை விட மிகக் குறைந்த கடன் தொகையே கிடைக்கவுள்ளது. எவ்வாறிருப்பினும் அந்தக் கடன் தொகையைப் பெறுவதற்கான இணக்கப்பாட்டை எட்டுவதன் மூலம் இலங்கைக்கு கிடைக்கும் நம்பகத்தன்மை மிக முக்கியத்துவமுடையதாகும்.
இந்த நம்பகத்தன்மையை உருவாக்கினால் மாத்திரமே ஏனைய நாடுகளிடமிருந்து முதலீடுகளையும் ஏனைய உதவிகளையும் பெற முடியும்.
இதற்காக வெளிப்படை தன்மையுடன் நிதி ஒழுக்கத்தை பேண வேண்டியுள்ளது. அத்தோடு நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களை இலாபமீட்டும் நிறுவனங்களாக மாற்றுவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது.
அதன் அடிப்படையிலேயே மின்சாரம் மற்றும் நீர் கட்டணங்களில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியேற்பட்டது. எனினும் எதிர்க்கட்சிகள் இதனை தமது அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்கிறது.
மறுபுறம் இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் உலக பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
எரிபொருளுக்கான கேள்வி அதிகரித்துள்ளமையால் அதன் விலைகளும் அதிகரிக்கக் கூடிய நிலைமை ஏற்படும். அத்தோடு மத்திய கிழக்கிலுள்ள இலங்கை தொழிலாளர்கள் தமது தொழில்களை இழக்கக் கூடிய வாய்ப்பும் உள்ளது.
அவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டால் மேற்கூறியவாறு மாதாந்தம் கிடைக்கும் 500 மில்லியன் டொலர் வருமானம் வீழ்ச்சியடையும். எனவே இவ்வாறான அனைத்து நெருக்கடிகளையும் எதிர்கொள்வதற்கு அனைவரும் தயாராக வேண்டும் என குறிப்பிட்டார்.