சுயாட்சி அதிகாரம் கோரி வரும் சோமாலிலாந்தை.. அங்கீகரித்த இஸ்ரேல்
சோமாலியாவில் இருந்து பிரிந்து சுயாட்சி அதிகாரம் கோரி வரும் சோமாலிலாந்து (Somaliland) பகுதியை, ஒரு சுதந்திர நாடாக இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது.
இதனூடாக, இத்தகைய அங்கீகாரத்தை வழங்கும் உலகின் முதல் நாடாக இஸ்ரேல் அமைந்துள்ளது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் சோமாலிலாந்து தலைவர் அப்திரஹ்மான் மொஹட் அப்துல்லாஹி ஆகியோருக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியானது.
இரு நாடுகளும் முழுமையான இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தவும், பரஸ்பரமாக தூதரகங்களைத் திறக்கவும் ஒப்புக்கொண்டுள்ளன. இதனிடையே, விவசாயம், சுகாதாரம், தொழில்நுட்பம் மற்றும் பொருளாதாரத் துறைகளில் உடனடி ஒத்துழைப்பை வழங்க இஸ்ரேல் முன்வந்துள்ளது.
ஆபிரகாம் உடன்படிக்கை
சோமாலிலாந்து விரைவில் 'ஆபிரகாம் உடன்படிக்கையில்' இணையும் என்று அதன் தலைவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு சோமாலியா அரசு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

இது தனது நாட்டின் இறையாண்மை மீதான நேரடித் தாக்குதல் என்றும், சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது என்றும் அந்தநாட்டுப் பிரதமர் ஹம்சா அப்தி பாரே கூறியுள்ளார்.
அத்துடன், எகிப்து, துருக்கி மற்றும் ஜிபூட்டி ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களும் இணைந்து இஸ்ரேலின் இந்த முடிவை வன்மையாகக் கண்டித்துள்ளனர். இது பிராந்தியத்தின் நிலைத்தன்மையைப் பாதிக்கும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.
சோமாலிலாந்து என்பது சோமாலியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும், இஸ்ரேலின் இந்த ஒருதலைப்பட்சமான முடிவு ஆபத்தான முன்னுதாரணமாக அமையும் என்றும் ஆபிரிக்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.
1991ஆம் ஆண்டு சோமாலியாவில் ஏற்பட்ட உள்நாட்டுப் போருக்குப் பின்னர், சோமாலிலாந்து தன்னைத் தனி நாடாக அறிவித்துக் கொண்டது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சொந்தமாக நாணயம், கடவுச்சீட்டு மற்றும் காவல்துறை ஆகியவற்றைக் கொண்டுள்ளது.