காசா மீது தரை வழி தாக்குதல் நடத்த தயார்: இஸ்ரேலின் அதிரடி அறிவிப்பு
காசா மீது தரை வழி படையெடுப்பை மேற்கொள்ள நாங்கள் தயாராகவே இருக்கிறோம் என இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் நாட்டின் மீது ஹமாஸ் போராளிகள் கடந்த 7 ஆம் திகதி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏவுகணை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியிருந்தனர்.
பின்னர் அந்நாட்டு எல்லைக்குள் அதிரடியாக புகுந்து ஆண்கள் மற்றும் பெண்கள் என பலரை தாக்கி வன்முறையில் ஈடுபட்டனர்.
இஸ்ரேல் அரசு பதிலடி
இதில், 260 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். 210 பேரை பணயக் கைதிகளாக சிறை பிடித்து சென்றனர்.இதனை தொடர்ந்து, இஸ்ரேல் அரசும் இதற்கு பதிலடி கொடுத்து வருகின்றது.
19-வது நாளாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போராளிகள் இடையேயான மோதல் இன்றும் தொடர்ந்து வருகின்றது.பணய கைதிகளை மீட்கும் முயற்சியும் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு படையின் தலைவரான லெப்டினென்ட் ஜெனரல் ஹெர்ஜி ஹாலேவி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
அடுத்த கட்ட நடவடிக்கை
“நான் தெளிவாக ஒன்றை கூற விரும்புகிறேன். படையெடுப்பை மேற்கொள்ள நாங்கள் தயாராகவே இருக்கிறோம். ஒவ்வொரு நிமிடம் கடந்து போனாலும், எதிரிகளை நாங்கள் இன்னும் கூடுதலாகவே தாக்குவோம்.
அவர்களுடைய தளபதிகளை நாங்கள் கொல்வோம். அவர்களின் உட்கட்டமைப்புகளை தாக்கி அழிப்போம்.
அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கான உளவு தகவல்களை இன்னும் அதிகம் சேகரிப்போம்” என்றார்.
இதற்கு முன் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கருத்து தெரிவிக்கும்போது, களத்தில் ஹமாஸ் போராளிகளுக்கு எதிராக எங்களுக்கு ஒரேயொரு பணி உள்ளது.
அது அவர்களை அழிப்பது. அந்த பணியை முடிக்கும் வரை நாங்கள் நிறுத்தமாட்டோம்” என்று குறிப்பிட்டார்.