மரண தண்டனைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த இஸ்ரேல் தீவிரம்: ஐரோப்பிய ஒன்றியம் கவலை
இஸ்ரேலின் புதிய மரண தண்டனைச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஆரம்பகட்டப் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மரண தண்டனையை நிறைவேற்றுவதற்காக சிறைச்சாலையில் புதிய பிரிவு ஒன்று கட்டப்பட்டு வருவதாகவும், மரண தண்டனை விதிக்கப்படும் பாலஸ்தீனக் கைதிகளுக்காகப் புதிய "சிவப்பு" நிற சீருடைகள் ஏற்கனவே கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேலிய தேசிய பாதுகாப்பு அமைச்சர் இட்மார் பென்-கிவிர் தெரிவித்துள்ளார்.
கடந்த மாத இறுதியில் இஸ்ரேலிய நாடாளுமன்றமான நெசெட்டில் இதற்கான சட்டமூலம் அங்கீகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.
மரண தண்டனை
இஸ்ரேலின் இந்த அதிரடி நடவடிக்கை குறித்து ஐரோப்பிய ஒன்றியம் (EU) தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது.
எந்தச் சூழ்நிலையிலும் மரண தண்டனை வழங்கப்படுவதை ஐரோப்பிய ஒன்றியம் எதிர்ப்பதாக அதன் வெளியுறவு விவகாரங்களுக்கான பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், சர்வதேச சட்டங்கள் மற்றும் ஜனநாயகக் கோட்பாடுகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பதில் இஸ்ரேல் கொண்டுள்ள அர்ப்பணிப்பைப் பாராட்டுவதாகவும் அதே அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் அமைப்புகள் இந்தச் சட்டத்தை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், புதிய சிறைப் பிரிவின் கட்டுமானம் மற்றும் கைதிகளுக்கான சீருடை மாற்றம் குறித்த அறிவிப்புகள் மத்திய கிழக்கில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.