இஸ்ரேல் புதிய தாக்குதல் வியூகம்....! அதிகரிக்கும் உயிரிழப்புகள்: பணயக்கைதிகளை விடுவிக்கமாட்டோம் ஹமாஸ் அறிவிப்பு
ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள காசா பகுதி மீது இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் இராணுவ அதிகாரிகள் 6 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அமைப்பின் முக்கிய தளபதிகள், உட்கட்டமைப்புகளை குறிவைத்து இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், ஹமாஸின் மிக முக்கியமான படை பிரிவின் 2 தளபதிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இராணுவ பீரங்கிகள்
காசாவுக்குள் தரை வழித் தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராக உள்ள நிலையில், ஹமாஸின் காசா எல்லையில் இராணுவ பீரங்கிகள் அணிவகுத்து நிற்பதுடன் 3 இலட்சம் வீரர்கள் எல்லையில் குவிக்கப்பட்டு உள்ளனர்.
ஹமாசின் 250 நிலைகளை குறிவைத்து தரைவழி தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், ஹமாஸ் அமைப்பினர் பலர் கொல்லப்பட்டதாகவும் தாக்குதல் நடத்திவிட்டு பீரங்கிகள் மீண்டும் இஸ்ரேல் எல்லைக்குள் திரும்பி விட்டதாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
பணயக்கைதிகள் விடுதலை
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் 21 ஆவது நாளாக நீடித்து தொடர்ந்து வருகின்ற நிலையில் ஹமாஸ் இயக்கத்தின் மூத்த தலைவர்கள் ரஷ்யா சென்றுள்ளமை போரின் ஒரு திருப்பு முனையாக பார்க்கப்படுகின்றது.
ரஷ்யா செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த ஹமாஸ் அமைப்பின் நிர்வாகி அபு ஹமித் போர் நிறுத்த ஒப்பந்தம் எற்படாதவரை பணயக்கைதிகள் விடுதலை செய்யப்போவதில்லை என அறிவித்துள்ளார்
இந்நிலையில், இஸ்ரேல் - ஹமாஸ் போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 500 ஐ கடந்துள்ளது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இதுவரை 1,405 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும், காசா பகுதி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 7 ஆயிரத்து 28 பேர் உயிரிழந்துள்ளனர்.