இஸ்ரேல்- ஹமாஸ் ஒப்பந்தம்: முதற்கட்டமாக 25 பிணைக்கைதிகள் விடுதலை
இஸ்ரேல்- ஹமாஸ் ஒப்பந்தத்தின்படி முதற்கட்டமாக தாய்லாந்தை சேர்ந்த 12 பிணைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காசாவில் சிறை வைக்கப்பட்டிருந்த 12 பேர் விடுவிக்கப்பட்ட செய்தி அரசுக்கு கிடைத்துள்ளதாக தாய்லாந்து பிரதமர் ஸ்ரெட்டா தவிசின் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.
இதனை தொடர்ந்து, இஸ்ரேலைச் சேர்ந்த 13 பிணைக்கைதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் முதற்கட்டமாக மொத்தம் 25 பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கைதிகளை விடுதலை செய்ய இஸ்ரேல் முடிவு
மேலும் தடுத்துவைத்துள்ள 7000 கைதிகளில் 39 பேரை இன்று இரவு விடுதலை செய்ய இஸ்ரேல் முடிவு செய்யப்பட்டுள்ளதுடன், அடுத்த 3 நாட்களில் 150 கைதிகளை விடுதலை செய்ய இஸ்ரேல் ஒப்பந்தம் செய்துள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே நீண்ட நாட்களாக போர் நடைபெற்று வருகிறது. இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் அமைப்பினர் வெளிநாட்டினர் உள்பட 250ற்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்து சென்றனர்.
இதற்கிடையே பிணைக்கைதிகளை விடுவிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் கட்டார், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்தன.
இதில் பிணைக்கைதிகளை விடுவிப்பதற்கு ஈடாக காசாவில் 4 நாட்களுக்கு போர் நிறுத்துவதாக இஸ்ரேல் அரசு அறிவித்தது.
இந்த 4 நாள் போர் நிறுத்தத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட 50 பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |