காசாவை மீண்டும் கட்டியெழுப்ப கைகோர்க்கும் பிஃபா!
சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான பிஃபா (FIFA) மற்றும் ட்ரம்ப்பின் அமைதிக்கான சபை ஆகியவை இணைந்து, போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கால்பந்து விளையாட்டின் மூலம் நிலையான வளர்ச்சியை ஏற்படுத்தவும், உலகளாவிய முதலீடுகளை ஈர்க்கவும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையின் கீழ் உருவாக்கப்பட்ட இந்த அமைதிக்கான சபை, தனது முதல் கூட்டத்தில் காசாவின் மறுசீரமைப்பு நிதி குறித்து விரிவாக விவாதித்தது.
காசாவை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கம்
ஹமாஸ் ஆயுதக் குழு முழுமையாகக் கலைக்கப்பட்ட பிறகு, காசாவை மீண்டும் கட்டியெழுப்புவதே இந்த நிதியத்தின் முக்கிய நோக்கமாகும்.
எனினும், ஹமாஸை நிராயுதபாணியாக்குதல், இஸ்ரேலிய துருப்புக்கள் வெளியேறுதல் மற்றும் மனிதாபிமான உதவிகள் சீராகச் சென்றடைவது போன்ற விடயங்கள் இந்த சபையின் வெற்றிக்கு பெரும் சவால்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் கூட்டத்தின் போது, காசாவில் கால்பந்து உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக பிஃபா பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. பாடசாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில் 50 மினி-பிட்ச்கள் அமைத்தல்.
பல்வேறு மாவட்டங்களில் 5 முழு அளவிலான கால்பந்து மைதானங்களை உருவாக்குதல். நவீன வசதிகளுடன் கூடிய பிஃபா அகடமி ஒன்றை நிறுவுதல். சுமார் 20,000 முதல் 25,000 இருக்கைகள் கொண்ட புதிய தேசிய விளையாட்டு அரங்கம் ஒன்றை அமைத்தல். காசாவில் கால்பந்து தொடர்பான இந்தத் திட்டங்களுக்காக பிஃபா சுமார் 75 மில்லியன் டொலர் நிதியைத் திரட்டும் என்று ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

"கால்பந்து என்பது உலகளாவிய ஒரு மொழி. போருக்குப் பிந்தைய மீட்சி நடவடிக்கைகளுக்கு கால்பந்து மூலம் முதலீடுகளைக் கொண்டுவருவதில் பிஃபா உறுதியாக உள்ளது" என்று பிஃபா தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் திட்டம் வெறும் விளையாட்டு மைதானங்களை அமைப்பதோடு மட்டுமல்லாமல், உள்ளூர் இளைஞர்களின் பங்கேற்பு, சிறுவர் மற்றும் சிறுமியருக்கான முறையான லீக் போட்டிகள், வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் உள்ளூர் வணிக நடவடிக்கைகளை ஊக்குவித்தல் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா கனடாவின் கூட்டாளர் அல்ல... ரஷ்யாவைவிட மிகப்பெரிய அச்சுறுத்தல்: ஆய்வு முடிவுகள் News Lankasri