இஸ்ரேலுக்குள் நுழைய ஹமாஸ் ஆயுதக் குழுவினர் பயன்படுத்திய இரண்டாம் உலக போர் உத்தி
இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்திய ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இரண்டாம் உலக யுத்த போர் உத்திகளை பயன்படுத்தியிருக்க கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த (07.10.2023) ஹமாஸ் ஆயுதக்குழுவைச் சேர்ந்தவர்கள் இஸ்ரேல் மீது கொடிய தாக்குதலை நடத்தியபோது, அந்நாட்டிற்குள் படையெடுத்து வந்த ஆயுதக்குழுவினர் பாராசூட் மூலமாக நாட்டிற்குள் நுழைந்தார்கள்.
'இஸ் அல்-தின் அல்-கஸ்ஸம்-ப்ரிகேட்ஸ்' ஆயுதக்குழுவின் இராணுவப் பிரிவினர் ஒரு இசை விழாவிற்குச் சென்றவர்கள் மற்றும் காசா பகுதியைச் சுற்றியுள்ள இஸ்ரேலிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
இந்த தீடீர் தாக்குதலை 'அல்-அக்ஸா தாக்குதல்' எனக் கூறினர். பாலத்தீன ஆயுதக்குழுவைச் சேர்ந்தவர்கள் பாராசூட் மூலமாகவும், கடல் மற்றும் நில வழியாகவும் ஊடுருவியதாக இஸ்ரேலிய இராணுவ செய்தியாளர் ஒருவர் உறுதிப்படுத்தினார்.
அல்-கஸ்ஸாம் ஆயுதக்குழவைச் சேர்ந்தவர்கள் பாராசூட் மூலமாகத் தரையிறங்குவது போன்ற படங்களும், காணொளிகளும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன.
இஸ்ரேல் மீதான தாக்குதலின்போது இதுபோன்ற நுட்பத்தைப் பயன்படுத்தியது இதுவே முதல்முறையாகக் கருதப்படுகிறது. எல்லையை ஊடுருவிச் செல்லும் நோக்கத்தில், ஹமாஸின் இராணுவப் பிரிவினர் வான்வழித் தாக்குதல் நடத்த இராணுவ பாராசூட்டுகளை தொடர்ச்சியாகப் பயன்படுத்தினர்.
இரண்டாம் உலகப் போரின்போதும் ஜெர்மனி மற்றும் அதன் நேச நாடுகள் பாராசூட் மூலம் தாக்குதல் நடத்தும் பிரிவினரைத்தான் முதலில் சண்டையிட அனுப்பினார்கள்.
பாராகிளைடர்கள் தரையிலிருந்து சராசரியாக 5,000 மீட்டர் உயரத்தில் மூன்று மணிநேரம் பறக்க முடியும். பாராகிளைடிங் இணையதளங்களில் உள்ள தகவலின் படி, இந்த பாராகிளைடர்களால் 230 கிலோ எடை வரை சுமக்க முடியும்.
இஸ் அல்-தின் அல்-கஸ்ஸம்-ப்ரிகேட்ஸ் இராணுவத்தின் ஊடகப் பிரிவினர் பகிர்ந்துள்ள காணொளிகளில், அவர்கள் தரையிலிருந்து பாராகிளைடர்களை ஏவுவதைக் காட்டுகிறார்கள். ஒவ்வொன்றிலும் ஒன்று அல்லது இரண்டு பேரால் இயக்கப்படுகின்றன.
அவர்கள் வெளியிட்டுள்ள மற்ற காட்சிகள், ஆயுதக் குழுவைச் சேர்ந்தவர்கள் இஸ்ரேலிய தளங்களில் தரையிறங்கும் முன்பாகவே வானிலிருந்து துப்பாக்கிச் சூடு நடத்துவதைக் காட்டுகின்றன.
காசாவையும் இஸ்ரேலையும் பிரிக்கும் வேலியைத் தாண்டி பாராசூட் மூலம் ஊடுருவியவர்களை 'சகர் படை' என அழைக்கின்றனர்.