போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்
லெபனானில் போர்நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் உள்ள போதிலும், இஸ்ரேலிய இராணுவம் தனது தாக்குதல்களைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது.
லெபனானின் தெற்குப் பகுதியில் உள்ள நபாதியே (Nabatieh) மாவட்டத்தின் யாஹ்மோர் அல்-ஷகிப் (Yahmor al-Shaqif) கிராமத்தில் இஸ்ரேல் நடத்திய இரண்டு வான்வழித் தாக்குதல்களில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
போர்நிறுத்த உடன்படிக்கை
இந்தத் தாக்குதல் லித்தானி ஆற்றிற்கு வடக்கே உள்ள பகுதியில் நடத்தப்பட்டுள்ளது. கொல்லப்பட்டவர்களின் விபரங்கள் இன்னும் முழுமையாக வெளியிடப்படாத நிலையில், போர்நிறுத்த விதிகளுக்கு முரணாக இஸ்ரேல் இத்தகைய தாக்குதல்களைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவது சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு லெபனான் எல்லைப் பகுதியில் இஸ்ரேல் தன்னிச்சையாக அறிவித்துள்ள "மஞ்சள் கோடு" (Yellow Line) எனப்படும் ஆக்கிரமிப்பு மண்டலத்திற்குள் அமைந்துள்ள நகுரா (Naqoura) மற்றும் பின்ட் ஜுபெயில் (Bint Jbeil) போன்ற நகரங்களில் இஸ்ரேலிய இராணுவம் வீடுகள் மற்றும் கட்டிடங்களைத் தகர்த்து வருவதால் பாரிய வெடிப்புச் சத்தங்கள் கேட்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும், ஹிஸ்புல்லா அமைப்பினர் ஏவுகணைகளை ஏவுவதற்குப் பயன்படுத்துவதாகக் கூறி, ஆக்கிரமிப்பு மண்டலத்திற்கு மிக அப்பால் வடக்கே அமைந்துள்ள பல இடங்கள் மீதும் இன்று அதிகாலை இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
போர்நிறுத்த உடன்படிக்கையை நிலைநாட்ட சர்வதேச நாடுகள் முயற்சி செய்து வரும் வேளையில், இஸ்ரேலின் இந்தத் தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகள் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளன.