அரசின் தனிமைப்படுத்தல் செயற்பாடுகள் ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்குகின்றது
இலங்கை அரசின் கோவிட் -19 தனிமைப்படுத்தல் செயற்பாடுகள் அனைத்தும் ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்குவதற்கே அதிகம் பயன்படுத்தப்படுகின்றது என அரசின் இந்த மோசமான செயற்பாடுகளுக்குத் தமிழ்த் தேசிய பண்பாட்டுப் பேரவை தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ்.நிஷந்தன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசிய பண்பாட்டுப் பேரவை இன்று (13) கண்டனம் தெரிவித்து ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டில் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியினருக்கு ஒரு நியாயமும் அநீதிகளுக்கு எதிராக நீதி கேட்டுப் போராடும் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகளுக்கு வேறு ஒரு நியாயம் என்பதும் இலங்கையின் அரசியலமைப்பு சட்டத்தின் மீதும் ஜனநாயகத்தின் மீதும் பெரும் அவநம்பிக்கையை ஏற்படுத்துகின்றது.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக, கொத்தலாவல பல்கலைக்கழக சட்ட மூலத்தை எதிர்த்து அறவழியில் குரல் கொடுத்துப் போராடிய இலங்கை ஆசியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட பௌத்த துறவிகள் உட்பட 16 பேர் இலங்கை தேசத்தின் ஜனநாயகத்திற்கு முரணாகக் கைது செய்யப்பட்டுத் தனிமைப்படுத்தல் சட்டத்தின்படி கேப்பாப்புலவு முகாமில் அடைக்கப்பட்டிருப்பதைத் தமிழ்த் தேசிய பண்பாட்டுப் பேரவை வன்மையாகக் கண்டிக்கின்றது.
கோவிட் -19 சட்டத்தைப் பயன்படுத்தி மக்களின் ஜனநாயகப் போராட்டங்களை அடக்கும் இலங்கை அரசைக் கண்டித்த ஜ.நா வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கரின் அறிக்கையை நாம் வரவேற்கின்றோம். மேலும் கேப்பாப்புலவு தடுப்பிலிருந்து தொடர்ந்து போராடும் ஜோசப் அணியினருக்கு நாம் எமது பூரண ஆதரவை வழங்குவதோடு இலங்கை அரசிடம் நாம் கோரிக்கை ஒன்றையும் முன்வைக்கின்றோம்.
இலங்கை அரசு சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்தும் நடவடிக்கைகளை உடனே நிறுத்த வேண்டும். இதுவரை காலமும் இவ்வாறு தவறான சட்ட நடவடிக்கைகளால் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்வதோடு ஜனநாயகத்திற்கு முரணான கொத்தலாவல சட்ட மூலத்தை நீக்குமாறும் இலங்கை அரசைக் கேட்டுக்கொள்கின்றோம்.
மேலும் நாட்டில் இடம்பெறும் அநீதிகளுக்கு எதிராகப் போராடும் அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகளோடும் தமிழ்த் தேசிய பண்பாட்டுப் பேரவை இணைந்து குரல் கொடுக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது .





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam
