நாடளாவிய ரீதியில் மீண்டும் அமுல்படுத்தப்படும் பயணக்கட்டுப்பாடு
எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் மீண்டும் நாடு பூராகவும் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளதனால் அந்த நாட்களில் பொதுப் போக்குவரத்து நடவடிக்கைகள் இடம்பெற மாட்டாது என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுகின்றவர்கள் கோரிக்கை விடுத்தால் அதற்காக இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகளை போக்குவரத்தில் ஈடுபடுத்த தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை கோவிட் கட்டுப்பாட்டுக்கான இறுதித் தீர்வு பயண கட்டுப்பாடு விதிப்பது அல்ல, இதற்கான தடுப்பூசியை வழங்குவதே சிறந்த தீர்வாகும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை,இலங்கையில் நாளாந்தம் கோவிட் தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில், நாளை மறுதினம் நாடளாவிய ரீதியில் இரண்டு பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி மே 21 ஆம் திகதி வௌ்ளிக்கிழமை இரவு 11 மணி தொடக்கம் மே மாதம் 25 ஆம் திகதி செவ்வாய்கிழமை அதிகாலை 4 மணி வரையும் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், மே 25 செவ்வாய்கிழமை இரவு 11 மணி முதல் மே 28 வௌ்ளி அதிகாலை 4 மணி வரை மற்றுமொரு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.