சர்வதேச மனித உரிமை தினத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் போராட்டம் (Photos)
சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று நாட்டில் பல இடங்களில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு
முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று(10) தமது உறவுகளின் உரிமைகளை வேண்டி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்துவரும் முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் அமைந்துள்ள அலுவலகத்துக்கு முன்பாக இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர் .
முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் யுத்தம் முடிவடைந்த நாள் முதல் இன்று வரை 12 வருடங்களாக தமது உறவுகளை தேடி போராடிவருகின்ற நிலையில் கடந்த 2017 ம் ஆண்டு மார்ச் மாதம் எட்டாம் திகதி முதல் வீதியில் அமர்ந்து தொடர்ச்சியான போராட்டத்தை ஆரம்பித்த நிலையில் இன்று 1737 ஆவது நாளாகவும் போராடி வருகின்றனர்.
இந்நிலையில் யுத்தம் முடிவடைந்த பின்னர் இலங்கை இராணுவத்திடம் கையளித்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளையும், யுத்த காலங்களில் கைதுசெய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளையும் வெள்ளை வான்களில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளையும் என பல்வேறு வழிகளில் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கான நீதியை கோரியே இந்த தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
பல ஆண்டுகளாக போராடிவரும் மக்கள் உள்நாட்டில் தமக்கு எந்த தீர்வையும் தராது எனவும் சர்வதேசமே தமக்கான தீர்வை தர வேண்டும் எனவும் தமது உறவுகளின் உரிமைகளை உறுதிப்படுத்துமாறும் கோரி சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று தமது உறவுகளின் உரிமைகளை வேண்டி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
காணாமல் ஆக்கப்பட் உறவினர்களின் தொடர் போராட்டம் இடம்பெற்றுவரும் அலுவலகத்தில் ஆரம்பித்த குறித்த போராட்டம் முல்லைத்தீவு நகர் சுற்றுவட்ட பகுதிவரை சென்றது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எங்கே எங்கே உறவுகள் எங்கே, வேண்டும் வேண்டும் நீதிவேண்டும், சர்வதேசமே பதில் சொல், மனித உரிமைகள் மதிக்கப்படாத நாட்டிலிருந்து ஆயிரம் நாட்களுக்கு மேலாக போராடும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நாம். உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறும் பல்வேறு வாசகங்கள் எழுதப்படட பதாதைகளை தங்கியவாறும் சர்வதேசத்தின் தீர்வை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
போராட்டம் இடம்பெற்ற பகுதிகளில் 25க்கும் மேற்பட்ட புலனாய்வாளர்கள், இராணுவத்தினர் போராட்டம் மேற்கொண்டவர்களை கண்காணிக்கும் புகைப்படம் எடுக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தனர் .



மட்டக்களப்பு
சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்புகளின் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த கவன ஈர்ப்பு போராட்டம் மட்டக்களப்பு படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபிக்கு அருகே நடைபெற்றது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிவேண்டியும், சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலை வேண்டியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டும் என்ற கோசங்கள் எழுப்பப்பட்டதுடன் தமது உறவுகளை மீட்டுத்தரவும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான உண்மை நிலையினை வெளிப்படுத்தவும் சர்வதேச சமுகம் முன்வரவேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.
இலங்கை அரசாங்கமே ஒப்படைக்கப்பட்ட, சரணடைந்த பிள்ளைகள் எங்கே, அச்சுறுத்தாதே அச்சுறுத்தாதே அரச புலனாய்வுத்துறையினர் மூலம் அச்சுறுத்தாதே,சர்வதேசமே மறுக்கப்படும் நீதியைப்பெற்றுத்தா, இலங்கை அரசே உம்மிடம் கையளித்த எங்கள் பிள்ளைகள் எங்கே, சர்வதேசமே இலங்கை அரசுக்கு துணைபோகாதே போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.
சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இலங்கை அரசாங்கம் பெருமளவான கண்தானம் செய்துள்ளதாக அந்த நாடுகளில் உள்ள முக்கிஸ்தர்கள் தெரிவித்துள்ள நிலையில் இந்த கண்களை இலங்கை அரசாங்கம் எங்கிருந்து பெற்றுக்கொண்டது என்பதை பகிரங்கமாக
வெளிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை போராட்டத்தில் கலந்துகொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன் (P.Ariyanethiran), ஞா.சிறிநேசன் (N.Srinivasan) ஆகியோரினால் கோரப்பட்டது.


