நாடளாவிய ரீதியில் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்
நாடளாவிய ரீதியில் இஸ்லாமியர்களால் நோன்புப் பெருநாளை இன்றைய தினம்(21.03.2026) சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
புனித நோன்புப் பெருநாள் தொழுகை கிழக்கு மாகாணத்தின் பல்வேறு இடங்களில் இடம்பெற்றுள்ளன.
நோன்புப் பெருநாள் தொழுகை
இதன் போது மருதமுனை தாறுல் ஹுதா மகளிர் இஸ்லாமிய அரபுக் கல்லூரியின் பணிப்பாளர் எம்.எல்.எம்.முபாறக் மதனி தொழுகை நடாத்தி பிரசங்கத்தினையும் நிகழ்த்தினார்.

அதில் ஆண்-பெண் இருபாலாருக்குமான இத் தொழுகைக்கு கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இதே வேளை அம்பாறை மாவட்டத்தின் நற்பிட்டிமுனை ,கல்முனை, சம்மாந்துறை, நிந்தவூர், அக்கரைப்பற்று, பொத்துவில், உள்ளிட்ட முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளிலும் பெருநாள் தொழுகைகள் பரவலாக இடம்பெற்றன.
மேற்படி பகுதிகளில் இடம்பெற்ற பெருநாள் தொழுகைகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

கந்தளாய்
புனித நோன்புப் பெருநாளை (ஈதுல் ஃபித்ர்) முன்னிட்டு, கந்தளாய் இலாஹியா ஜும்மா பள்ளிவாயலில் பெருநாள் தொழுகை இன்று(21.03.2026) காலை 6.15 மணிக்கு மிக விசேடமாக இடம்பெற்றுள்ளது.
பள்ளிவாயலின் பேஷ் இமாம் அஷ்ஷெய்க் ஏ. நாபில் அஸாதி பெருநாள் தொழுகையை நடத்தியதுடன், நோன்புப் பெருநாளின் சிறப்புகளை உள்ளடக்கிய குத்பா பிரசங்கத்தையும் நிகழ்த்தினார்.
விசேட தொழுகை
இதன்போது, நாட்டின் நிரந்தர சமாதானமும், நிலையான அபிவிருத்தியும் ஏற்பட வேண்டுமென இறைவனிடம் விசேட துவா பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த பெருநாள் தொழுகையில் கந்தளாய் பகுதியைச் சேர்ந்த பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர். தொழுகையைத் தொடர்ந்து, வருகை தந்திருந்த மக்கள் ஒருவருக்கொருவர் புனித நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் பரிமாறிக்கொண்டனர்.
மேலதிக தகவல் - யூசுஃப்
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் பிரதான திடல் தொழுகை யாழ் மர்யம் ஜுமுஆ பள்ளிவாசலின் ஏற்பாட்டில் மொளலவி எம்.ஏ.பைசர் (மதனி) தலைமையில் வழமை போன்று இம்முறையும் யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரி ஜின்னா மைதானத்தில் இன்று(21) காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இன்றைய தொழுகையில் பெருநாள் தொழுகை மற்றும் பெருநாள் விசேட குத்பா உரையினை மொளலவி எம்.ஏ.பைசர் (மதனி) நிகழ்த்தியுள்ளார்.
நோன்பின் மகத்துவம், நோன்புப் பெருநாளின் முக்கியத்துவம், பெருநாள் தினத்தில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய மார்க்க கடமைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பெருநாள் உரை அமைந்திருந்தது.

மேற்படி பெருநாள் திடல் தொழுகையில் யாழ்ப்பாணம் முஸ்லிம் சமூகப் பிரதிநிதிகள், ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், யுவதிகள், சிறுவர்கள் என சுமார் ஆயிரம் பேர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
10 வயதிற்கு குறைந்த சிறார்களில் 30 நோன்புகளையும் முழுமையாக நோற்றவர்களுக்கு பெருநாள் காசு அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.
மேலதிக தகவல் - தீபன்
முள்ளிப்பொத்தானை
புனித றமழான் மாதத்தை தொடர்ந்து ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் திடல் தொழுகை முள்ளிப்பொத்தானை ஈச்ச நகர் பொது விளையாட்டு மைதானத்தில் இன்று (21.03.2026) காலை இடம்பெற்றுள்ளது.
முள்ளிப்பொத்தானை புஹாரி ஜூம்ஆ பள்ளிவாயல்,ஈச்ச நகர் விளையாட்டு கழகம் மற்றும் ஜனாசா நலன்புரி சங்கம் இணைந்து ஏற்பாடு செய்த திடல் தொழுகையின் குத்பா பிரசங்கத்தை தம்பலகாமம் பிரதேச உலமா சபை தலைவர் மௌலவி ஏ.எல்.எம்.ஹூசைன் நிகழ்த்தினார்.

சகோதரத்துவம், ஒற்றுமை ,பரஸ்பர நல்லெண்ணம் இதன் மூலம் ஒருவருக்கிடையில் கைலாகு கொடுத்து முசாபஹா செய்தனர்.
அதில் பெருந்திரளான ஆண்கள்,பெண்கள் என பலரும் குறித்த திடல் தொழுகையில் கலந்து கொண்டனர்.
மேலதிக தகவல் - ரொஷான்