இஷாரா செவ்வந்தியின் பின்னணியில் தொடரும் கைதுகள்: வெளிவரும் முக்கிய வாக்குமூலங்கள்
நேபாளத்தில் கைது செய்யப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ கொலையின் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியை மறைத்து வைக்க உதவியதாக கூறப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு குற்றப்பிரிவின் அதிகாரிகள் குழு மதுகம பகுதியில் 45 வயதுடைய சந்தேகநபரையும் மித்தெனிய பகுதியில் 26 வயதுடைய சந்தேகநபரையும் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு கொழும்பு குற்றப்பிரிவால் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
இதேவேளை, நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இந்த நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட இஷார செவ்வந்தியை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
பொலிஸார் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த பின்னர் இந்த நீட்டிக்கப்பட்ட தடுப்புக்காவல் உத்தரவு வழங்கப்பட்டது.
முக்கிய தகவல்களை கண்டுபிடித்த புலனாய்வு அதிகாரிகள்
இதற்கிடையில், கொலைக்குப் பின்னர் இஷாரா தங்க வைக்கப்பட்டிருந்த வெலிபென்னே வீட்டின் உரிமையாளரிடமிருந்து கொழும்பு குற்றப் புலனாய்வு அதிகாரிகள் பல முக்கிய தகவல்களைக் கண்டுபிடித்துள்ளனர்.
ஐம்பத்திரண்டு (52) வயதுடைய பெண் மதுகம மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றியுள்ளார்.
"மதுகம ஷான்" என்பவரை சிறிது காலமாக அறிந்திருந்ததாகவும், கணேமுல்ல சஞ்சீவ கொலை நடந்த நாளில் "மதுகம ஷானின்" தொலைபேசி அழைப்பின்படி, அளுத்கம டிப்போவிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று இஷாரா செவ்வந்தியை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றதாக பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மறுநாள் காலை வீட்டிலிருந்து தானே இஷாராவை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள், இஷாராவுக்கு அடைக்கலம் கொடுத்த 52 வயது பெண்ணின் மருமகன் என்பதையும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பொறுப்பான பொலிஸ் அதிகாரியாக இருந்தபோதிலும், இஷாராவைப் பற்றி அனைத்து தகவல்களும் அவருக்குத் தெரிந்திருந்தும், அவர் எந்த பாதுகாப்புப் பிரிவிற்கும் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




