இந்திய கிரிக்கெட் வீரருக்கு எதிரான இனவெறி கருத்தை வெளியிட்ட பெண் வர்ணனையாளர்
இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு எதிராக இனவெறி கருத்தை வெளியிட்ட பெண் வர்ணனையாளர் ஈசா குஹா வர்ணனையில் இருந்து தடை செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா மீண்டும் ஒருமுறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இரண்டாம் நாள் முடிவில் அவுஸ்திரேலிய அணி ஏழு விக்கெட் இழப்பிற்கு 400 ஓட்டங்களை கடந்தபோதும், அதில் ஐந்து விக்கட்டுக்களை பும்ரா வீழ்த்தியுள்ளார். இதனையடுத்து, பும்ராவை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இனவெறி சொல்
எனினும், பும்ரா ஐந்து விக்கட்டுக்களை கைப்பற்றியபோது, முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீராங்கனையும் பெண் வர்ணனையாளருமான ஈசா குஹா(Isa Tara Guha), அவரை பாராட்டி பேசுவதாக கூறி, இனவெறி சொல் ஒன்றை பயன்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அவருடன் வர்ணனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அவுஸ்திரேலிய முன்னாள் வீரர் பிரட்லீ, முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு தலைமை தாங்கிய, இந்த போட்டியில் அபாரமாக செயற்பட்டுள்ளார் என்று பாராட்டினார்.
இதன்போது பேசிய ஈசா குஹா, பும்ராவை 'MVP' என்று குறிப்பிட்டார். 'MVP' என்றால் 'Most valuable player'(மிகவும் பெறுமதிமிக்க வீரர்) என்று அர்த்தம்.
தடை
ஆனால் அதற்கு விளக்கம் கொடுக்கிறேன் என பேசிய ஈசா குகா, 'most valuable Primate' என்ற வார்த்தையை பயன்படுத்தினார்.
இதுவே தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. பிரைமேட் என்றால் குரங்கு இனத்தை சேர்ந்த ஒரு உயிரினத்தை குறிப்பதாக அர்த்தப்படுகிறது. எனவே ஈசா குஹா, பும்ராவை இன வெறியுடன் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனையடுத்து, பலரும் ஈசா குஹாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ஈசா குஹா கிரிக்கெட் வர்ணனையில் இருந்து தடை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |