இளம் அரசியல் முக்கியஸ்தர் ஒருவருக்கு எதிராக மாந்திரீக செய்வினை : நாடாளுமன்றில் அம்பலம்
மாந்திரீக செய்வினை காரணமாக தனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக சிலர் கூறுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ (Harin Fernando) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிராக கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி தான் கருத்து கூறியதாகவும் மே மாதம் முதலாம் திகதி தனக்கு சத்திர சிகிச்சை செய்யப்பட்டது எனவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் செப்டம்பர் முதலாம் திகதி அரசாங்கத்தை விமர்சித்ததாகவும் ஒக்டோபர் முதலாம் திகதி மீண்டும் தான் ஒன்பது மணி நேர சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனக்கு மாந்திரீக செய்வினை செய்யப்பட்டுள்ளதாக சிலர் கூறுகின்றனர் எனவும் சில அக்காமார் தனக்கு மாந்திரீகம் செய்வதாக தகவல் கிடைத்துள்ளது எனவும் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
எனினும் இவ்வாறான மாந்திரீக செய்வினைகளுக்கு அஞ்ச போவதில்லை எனவும் தான் பின்பற்றும் புனித சமயம் இருப்பதால், தான் பாதுகாக்கப்படுவேன் எனவும் உண்மையாக சமயத்தை பின்பற்றும் நபர்களுக்கு எவ்வித தீமையும் நெருங்காது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
அரசாங்கத்தின் முக்கிய அரசியல்வாதிகள் உட்பட பல அரசியல்வாதிகள் அனுராதபுரத்தில் உள்ள ஞானக்கா என்ற பெண்மணியிடம் ஜோதிட எதிர்வுகூரல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து ஆலோசனை பெற்று அதன் படி செயற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
