உக்ரைன் மீது ரஷ்யாவின் படையெடுப்பு! மூன்றாம் உலகப் போருக்கான தொடக்கமா?
உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய அதிபர் மாளிகையின் சமீபத்திய நடவடிக்கைகளைக் காணும் பலரும் இதைத்தான் கேட்கிறார்கள், சிந்திக்கிறார்கள். ரஷ்ய அதிபர் மாளிகையின் இந்த நடவடிக்கைகள் மேற்கிலிருந்து பல கண்டனங்களையும் பொருளாதாரத் தடைகளையும் தூண்டியிருக்கிறது.
ரஷ்யா-உக்ரைன் எல்லையில் சூழல் எவ்வளவு மோசமாக இருந்தாலும், இப்போதைக்கு நேடோவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நேரடித் தாக்குதல் நடைபெறவில்லை.
சொல்லப்போனால், ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்கும் திறன் கொண்ட படையைக் கட்டமைப்பதைத் திகைப்புடன் பார்த்துக்கொண்டிருந்த அமெரிக்காவும் பிரிட்டனும் சிறிய எண்ணிக்கையிலான தங்கள் ராணுவப் பயிற்சியாளர்களையும் ஆலோசகர்களையும் திரும்ப அழைத்துக்கொண்டன.
"அமெரிக்காவும் ரஷ்யாவும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ள ஆரம்பித்தால், அது ஓர் உலகப்போர் தான்," என்று இம்மாதம் குறிப்பிட்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தாம் எந்தச் சூழலிலும் அமெரிக்கத் துருப்புகளை உக்ரைனுக்கு அனுப்பப் போவதில்லை என்று தெரிவித்தார்.
ஆனால் மேற்கத்திய தலைவர்கள், ரஷ்யா உக்ரைனை முழுதாக ஆக்கிரமிக்கக் கூடும் என்று அஞ்சுகிறார்கள்.
நீங்கள் எவ்வளவு கவலைப்பட வேண்டும் என்பது, நீங்கள் யார், எங்கு இருக்கிறீர்கள், ரஷ்யா அடுத்து என்ன செய்யப்போகிறது என்று பல விஷயங்களைப் பொறுத்தது.
நீங்கள் கிழக்கு உக்ரைனில் முன்கள ராணுவ வீரராக இருந்தால், உங்கள் நிலைமை மிகவும் ஆபத்தானது. மேலும் பல லட்சம் உக்ரைன் மக்களுக்கு, இந்த நெருக்கடி தங்கள் அன்றாட வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கும் என்ற பயம் நீங்காமல் இருக்கிறது.
உக்ரைனுக்குள் எத்தனை தூரம் படைகளை அனுப்புவது என்பது அதிபர் புதினுக்கும் அவரது நம்பிக்கைக்குரிய உள் வட்டாரங்களுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம்.
ரஷ்ய ஆக்கிரமிப்புப் படைகள் எல்லைகளில் குவிந்திருக்கும் வரை பரபரப்பான உக்ரைன் தலைநகர் கீஃப் மட்டுமின்றி மற்ற நகரங்களும் கூட தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியாது.
ஆனால் நேடோவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் மிக முக்கியப் பிரச்னையாக இருக்கப் போவது, ரஷ்யா நேட்டோ உறுப்பினர் நாடுகளை மிரட்டுவது தான். நேட்டோவின் சட்டக்கூறு 5-ன் படி, நேட்டோ உறுப்பினர் நாடு தாக்கப்பட்டால், மேற்கத்திய ராணுவக் கூட்டணி அந்த நாட்டைப் பாதுகாக்க வர வேண்டும்.
உக்ரைன் நேட்டோவின் உறுப்பினர் அல்ல. ஆனால் சேர விரும்புகிறது. புதின் இதைத் தடுப்பதில் உறுதியாக இருக்கிறார்.
சோவியத் காலத்தில் மாஸ்கோவின் சுற்றுப் பாதையின் ஒரு பகுதியாக இருந்த எஸ்டோனியா, லாட்வியா, லிதுவேனியா, போலந்து போன்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகள் இப்போது நேட்டோ உறுப்பினர்களாக இருக்கின்றன.
ரஷ்ய படைகள் உக்ரைனில் நின்றுவிடாது என்றும் பால்டிக் பிரதேசத்திலுள்ள உள்ள ரஷ்ய சிறுபான்மை இனத்தவர்களுக்கு "உதவ வருவதாக" சாக்குச் சொல்லி படையெடுப்புகளைத் தொடரும் என்றும் அவர்கள் பதற்றமடைந்துள்ளனர்.
இதனால், சமீபத்தில் நேட்டோ அதன் கிழக்கு ஐரோப்பிய உறுப்பினர்களின் தடுப்பகளை வலுப்படுத்தியிருக்கிறது. எனவே, ரஷ்யாவிற்கும் நேட்டோவிற்கும் இடையே நேரடி மோதல் இல்லாத வரை, இந்த நெருக்கடி, எவ்வளவு மோசமானதாக இருந்தாலும் ஒரு முழு அளவிலான உலகப் போராவதற்கு எந்த காரணமும் இல்லை.
ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில், 8,000-க்கும் மேற்பட்ட பயன்படுத்தக்கூடிய அணு ஆயுதங்கள் உள்ளன என்பதை மறந்துவிடாதீர்கள்.
எனவே போருக்கான சாத்தியங்கள் வானளாவியவை. "MAD" - நிச்சயமான பரஸ்பரப் பேரழிவு- என்ற பழைய பனிப்போர் சொல்லாடல் இன்னும் பொருந்தும்.
"புதின் நேட்டோவைத் தாக்கப் போவதில்லை. அவர் உக்ரைனை பெலாரஸ் போன்ற ஓர் அடிமை நாடாக மாற்ற விரும்புகிறார்," என்று ஒரு மூத்த பிரிட்டிஷ் ராணுவ அதிகாரி கூறினார்.
ஆனால் இங்கு துருப்புச் சீட்டு என்பது புதினின் மனநிலை. அவர் பெரும்பாலும் ஒரு செஸ் வீரரையோ, ஜூடோ வீரரையோ போல, மனசாட்சியற்று சிந்திப்பவர் என்று விவரிக்கப்படுபவர்.
அவரது பேச்சு ஒரு புத்திசாலித்தனமான யுத்த தந்திரம் வகுப்பவரைவிட, கோபமான சர்வாதிகாரியை ஒத்திருந்தது.
நேட்டோவை "தீமை" என்று அழைத்த அவர், ரஷ்யாவிலிருந்து சுதந்திரமான ஓர் இறையாண்மை கொண்ட நாடாக இருப்பதற்கு உக்ரைனுக்கு உரிமை இல்லை என்று கூறினார். இது கவலைக்குரியது.
ரஷ்யாவைப் பொருளாதாரத் தடைகளால் தண்டிக்கும் நாடு பிரிட்டன் மட்டும் அல்ல. அதை அமெரிக்கா அதிகமாகவே செய்கிறது. எடுத்துக்காட்டாக, ஜெர்மனி, ரஷ்யாவிலிருந்து வரும் மிகப் பெரிய நார்ட் ஸ்ட்ரீம் 2 எரிவாயு குழாய்க்கு சம்மதம் வழங்குவதை ஒத்திவைத்துள்ளது.
ஆனால் இங்கிலாந்து இதன் முன்னணியில் உள்ளது. ரஷ்யா நிச்சயமாக ஏதாவது ஒரு வடிவத்தில் பதிலடி கொடுக்கும். ரஷ்யாவில் மேற்கத்திய வணிகங்கள் பாதிக்கப்படலாம். ஆனால் புதின் முடிவு செய்தால் அதைவிட மேலும் மோசமானவை நிகழலாம்.
"பழிவாங்குதல்" சைபர் தாக்குதல்களின் வடிவத்தை எடுக்கலாம். இது பற்றி தேசிய சைபர் பாதுகாப்பு மையம் ஏற்கனவே எச்சரித்துள்ளது.
யார் செய்வது என்று கண்டுபிடிப்பது கடினமாக இருப்பினும், இவை வங்கிகள், வணிகங்கள், தனிநபர்கள் மற்றும் முக்கியமான தேசிய உள்கட்டமைப்பைக் கூட குறிவைக்கலாம்.
இப்போதைய பிரச்னை என்னவென்றால், ரஷ்யா உடனான உறவுகள் பல ஆண்டுகளாகக் குறைந்து வருகின்றன. இங்கிலாந்து மண்ணில் ரஷ்ய எதிர்ப்பாளர்களுக்கு விஷம் கொடுக்கப்பட்டது.
ரஷ்யாவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையில் பரஸ்பர நம்பிக்கை சுத்தமாக இல்லை. உக்ரைனில் நடந்து வரும் நெருக்கடிக்கு யார் காரணம் என்பது பற்றி நடைபெறும் சலசலப்பின் பின்னணி இதுதான்.