பிள்ளையானை தொலைபேசியில் தொடர்புகொள்ள முயற்சித்தாரா ரணில்!
தடுப்புக் காவலில் தடுத்து வைக்கப்படடுள்ள, முன்னாள் ராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொலைபேசி ஊடாக தொடர்புகொள்ள முயற்சித்தார் என தெரிவிக்கப்படுகின்றது.
ரணில் தமது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியின் மூலம், குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் (CID) விசாரணை அதிகாரியோடு தொடர்பு கொண்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையானை தொலைபேசி வழியாக பேச அனுமதி வழங்குமாறு கோரியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கோரிக்கையின் அடிப்படையில், ரணில் விக்கிரமசிங்க பயன்படுத்திய தனிப்பட்ட தொலைபேசி இலக்கத்தின் வாயிலாக குறித்த தொடர்பை ஏற்படுத்த பாதுகாப்பு அதிகாரி முயற்சி செய்துள்ளதாக நம்பத்தகுந்த தகவல் மூலங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், தடுப்புக் காவலில் உள்ள சந்தேக நபருக்கு தனது தொலைபேசி வழங்குவது சட்ட விரோதமானது என்றும், அதுபோன்ற கோரிக்கையே சட்டத்திற்கு புறம்பானது என்றும் வலியுறுத்தி, குறித்த கோரிக்கையை குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதான காவல் பரிசோதகர் முற்றாக மறுத்துள்ளார்.
மேலும், இந்த சட்டவிரோத அழுத்தம் தொடர்பில் அதிகாரபூர்வமாக ஒரு அறிக்கையை பதிவு செய்துள்ளதாகவும், இதன் அடிப்படையில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணை ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே, நேற்று (13) பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் தலைவர் உதய கம்மன்பில பிள்ளையானுக்கு சட்ட உதவி வழங்க முன்வந்துள்ளார்.
சட்ட உதவிகளை வழங்கும் நோக்கில் கம்மன்பில, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ.எஸ். முத்துமாலவிற்கு மின்னஞ்சல் அனுப்பி வைத்துள்ளார்.
பிள்ளையானுக்கான தற்காலிக சட்ட பிரதிநிதியாக செயற்பட வேண்டியிருப்பதால் அவரை நேரில் சந்திக்க அனுமதி வழங்குமாறு கோரியிருந்தார்.
இந்த மின்னஞ்சல் தொடர்பான தகவலை பெற்றதும், உதய கம்மன்பிலவை சந்திக்க, பிள்ளையான் ஒப்புக்கொண்டார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2004-2006 காலப்பகுதியில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பதவி வகித்த பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணை பிரகாரம், முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான், கடந்த ஏப்ரல் 8ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.